இயக்குநராகத் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகன், வில்லன் எனப் பல்வேறு வகையிலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
அதிலும் இவர் வில்லனாக நடித்தால் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற அளவுக்கு உத்தரவாத நடிகராகப் பெயரெடுத்துள்ளார்.
இந்நிலையில் அண்மைய பேட்டியில் தமது திரையுலக அனுபவங்கள் குறித்து விலாவாரியாகப் பேசியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
பிரியா பவானி சங்கருடன் இவர் இணைந்து நடித்துள்ள 'பொம்மை' படம் உலகெங்கும் நாளை வெளியீடு காண்கிறது. இப்படத்தின் நாயகன் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் இவர்தான்.
"திடீரென ஒரு படத்தைத் தயாரிக்க என்ன காரணம் என்று கேட்கிறார்கள். இந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என எனக்கு மிகுந்த ஆசை. ஒரு தமிழ் நடிகர், நாடு முழுவதும் அறியப்பட்ட பிரமுகராக இருக்கவேண்டும் என விரும்பினேன். அதற்காகத்தான் அமிதாப் பச்சனை வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு 'உயர்ந்த மனிதன்' படத்தைத் தொடங்கினேன். ஆனால் எதிர்பாராத விதமாக அந்தப் படத்தைப் பாதியில் கைவிட வேண்டியதாயிற்று.
"அதன் பிறகு இந்தியில் நடிக்க வேண்டும் என்று மனதில் உறுதியான ஒரு தீர்மானம் தோன்றிவிட்டது. எனவே யாரிடம், எந்தக் கதையைக் கேட்டாலும் தமிழுக்கு மட்டுமல்லாமல் இந்திக்கும் அது பொருத்தமாக இருக்குமா என்று யோசிப்பேன்.
அந்த வகையில் 'பொம்மை' படத்தின் கதையை இயக்குநர் ராதாமோகன் சொல்ல கேட்டபோது, அது இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும் எனத் தோன்றியது. அதனால்தான் அதை நானே தயாரிப்பது என முடிவு செய்தேன்.
"இந்தப் படத்தைத் தமிழில் வெளியிட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு தெலுங்கில் வெளியிடலாம். அதன் பிறகு கியாரா அத்வானி, கிருத்தி சனோன் போன்ற இளம் நாயகிகளை நடிக்க வைத்து இந்தியிலும் வெளியிடலாம்," என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இயக்குநர் ராதாமோகன் இவரிடம் கதை சொல்ல வந்தபோது, தயாரிப்பாளர் ஒருவரும் உடன் இருந்தாராம். எனினும், தாமே தயாரிப்பதாகக் கூறிவிட்டார். "இந்தியிலும் நானே கதாநாயகனாக நடிக்க விரும்புகிறேன். ஆனால் என்னை வைத்துப் படமெடுக்க வேண்டிய அவசியம் அந்தத் தயாரிப்பாளருக்கு இல்லை. எனவேதான் நான் தயாரிப்பாளராகிவிட்டேன்," என்று சொல்லும் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கருடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்க குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லை என்கிறார்.
"ஏற்கெனவே நானும் அவரும் இணைந்து நடித்த 'மான்ஸ்டர்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் மீண்டும் அதே ஜோடி இணையும்போது ரசிகர்கள் மீண்டும் ஆதரிப்பார்கள் எனக் கருதுகிறோம். மேலும், பிரியாவுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான முகச்சாயல் இருப்பதாகக்கூட சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன். 'பொம்மை' படத்தைப் பொறுத்தவரையில் பிரியாவும் அழகான பொம்மையைப் போல் தோற்றமளிப்பார். அதுமட்டுமல்ல, சில கோணங்களில் பார்க்கும்போது பிரியாவுக்கு நடிகை சிம்ரனின் சாயலும் உண்டு. நான் ஏற்கெனவே சிம்ரனுடனும் இணைந்து பணியாற்றி உள்ளேன். அதனால் பிரியாவுடன் இணைந்து நடிக்கும்போது எனக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் ஏற்கெனவே இந்த ஜோடியைத் திரையில் பார்த்ததுபோன்று இருக்கிறது.
"பிரியா தற்போது தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு, உடல் எடையைக் குறைத்து வருகிறார். ஏற்கெனவே இருக்கும் அழகை ஏன் குறைத்துக்கொள்கிறீர்கள் என்று அவரிடம் அறிவுறுத்தப் போகிறேன்," என்கிறார் எஸ்.ஜே.சூர்யா. பிரியாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என நீங்கள் சிபாரிசு செய்வது உண்மைதானா என்று கேட்டபோது, "அப்படிச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவருக்கான வாய்ப்புகளை தனது திறமையால் பெற்று வருகிறார். 'பொம்மை' படத்திலும்கூட அவரை முதலில் தேர்வு செய்யவில்லை. முதலில் வேறு சில நாயகிகளிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன் பிறகே பிரியாவை ஒப்பந்தம் செய்தோம்," என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
படங்கள், செய்திகள்: ஊடகங்கள்

