நடிகை காஜல் அகர்வால் மிக விரைவில் திரையுலகை விட்டு விலகப்போவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். திருமணத்துக்குப் பின்னர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் காஜல். மகனுக்கு நீல் என பெயரிட்டுள்ளார். தொடர்்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர், தமது கணவர் குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் திரையுலகில் நீடித்து வருவதாகப் பல பேட்டிகளில் குறிப்பிட்டு வந்தார். பல புதிய வாய்ப்புகள் அவரைத் தேடிவந்தன. தொடக்கத்தில் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், இப்போது குழந்தைக்கென நேரம் ஒதுக்க இயலாமல் தவிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே குழந்தையின் எதிர்காலம் கருதி அவர் திரையுலகைவிட்டு விலக முடிவு செய்துள்ளார். இதை அவரது கணவர் குடும்பத்தாரும் வரவேற்றுள்ளனராம்.
தாம் ரசிகர்களுடனான உரையாடலின்போது நடிகை அனுபமா பரமேஸ்வரன் அளித்த பதில்கள் சிறப்பாக இருந்ததாக சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி உள்ளனர். அண்மையில் இந்த உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அப்போது ரசிகர் ஒருவர், "கதாநாயகியாக நடிப்பதற்கான தகுதி உங்களுக்கு இல்லை என்பதால்தானே அத்தகைய வாய்ப்புகள் அமையவில்லை" என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அனுபமா, "நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் அண்ணா. எனினும் நான் நடிகைகளுக்கான பட்டியலில் இருக்கிறேன்," என்று குறிப்பிட்டார். இது மிகவும் புத்திசாலித்தனமான பதில் என ரசிகர்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.

