துர்கா கருணாநிதி
தமிழில் 2009ஆம் ஆண்டில் வெளியான 'யாவரும் நலம்' படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நீத்து சந்திரா.
தீராத விளையாட்டுப் பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன், சேட்டை, திலகர், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். சிங்கம் 3 திரைப்படத்தில் சூர்யாவுடன் ஒரு பாடலில் நடனமாடியுள்ளார்.
பீகாரைச் சேர்ந்த நீத்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, ஆங்கில, போஜ்புரி, கிரேக்கம், மராட்டி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் இம்மொழிகள் அனைத்தையும் நன்கு தெரிந்துவைத்துள்ளார்.
வேலை காரணமாக சிங்கப்பூருக்கு வருகை புரிந்திருந்த நீத்து தனது திரையுலகக் கனவுகளையும் லட்சியங்களையும் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.
"நான் 13 தேசிய விருதுகள் பெற்றவர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். இதுவரை அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், ஜான் ஆப்ரஹாம் ஆகியவர்களுடன் நடித்துள்ள நான் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகிய நடிகர்களுடன் நடிக்க விரும்புகிறேன்," என்றார் நீத்து.
அண்மையில் 'நெவர் பேக் டவுன்: ரிவோல்ட்' என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஹாலிவுட் உலகில் அடியெடுத்து வைத்தார் நீத்து.
சிறு வயதிலிருந்து தெக்வாண்டோ தற்காப்புக் கலை கற்றுவரும் நீத்துவுக்கு இந்த ஆக்ஷன் திரைப்படத்தின் கதாபாத்திரம் நன்கு பொருந்தியது.
"கதைக்கு முக்கியமாக விளங்குவதோடு கதையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களையே ஏற்று நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்," என்றார் நீத்து.
அண்மையில், அபுதாபியில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்துலகப் பிரிவை அவர் தொடங்கினார். இதன் மூலம் உலகளாவிய நிலையில் திரையுலகில் அடியெடுத்துவைத்துள்ளார்.
அவர் தயாரித்து அவரது சகோதரரான நித்தின் சந்திரா இயக்கிய 'மிதில்லா மக்கான்' என்ற திரைப்படம் தேசிய விருது வென்றது.
நீத்து தயாரிப்பிலும் நித்தின் இயக்கத்திலும் 'தெஸ்வா' என்ற திரைப்படமும் வெளிவந்தது. 'தெஸ்வா' என்ற திரைப்படம் 37 அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் நியமிக்கப்பட்டது. அவரது தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்களின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார் நீத்து. ஹாலிவுட் துறையில் நுழைந்த இவர் இனப் பாகுபாட்டை எதிர்கொண்டார். அதே நேரம், திறந்த கரங்களுடன் தன்னை வரவேற்றவர்களும் இருந்தனர் எனப் பகிர்ந்துகொண்டார்.
"எனது அடையாளத்தை இழக்காமல் தொடர்ந்து இந்திய திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். அதுமட்டுமல்லாமல், குறிப்பாக போஜ்புரி திரைப்படங்கள் தயாரிப்பதிலும் நான் கவனம் செலுத்தி வருகிறேன்," என்று நீத்து கூறினார்.
"பழமையான மொழிகளில் ஒன்றானது தமிழ்மொழி. செழுமையான மரபும் கலாசாரமும் கூட தமிழ் திரைப்படங்களில் என்றுமே இருப்பதுண்டு. அப்படிப்பட்ட தமிழ் மொழியிலான திரைப்படங்களில் நடிப்பதை நான் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கற்றல் அனுபவமாக உணர்ந்துள்ளேன்," என்று நீத்து கூறினார்.
இரண்டு ஹாலிவுட், ஒரு கொரிய, ஒரு மலையாள, இரண்டு இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார் நீத்து.
கூடிய விரைவில் இவர் நடித்துள்ள 'ஒன்2ஒன்' என்ற ஒரு தமிழ் திரைப்படமும் கூட வெளியாகவுள்ளது.

