ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரு மறக்கமுடியாத அனுபவம். உலக அழகி, உள்ளூர் அழகி என யாராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைப்பது வழக்கம். தாங்களும் அதற்கு விதிவிலக்கல்ல என பச்சைக்கொடி காட்டியுள்ளனர் இப்போதைய நடிகைகள் சிலரும்.
திரையுலகில் 1980, 90களில் உச்சத்தில் இருக்கும்போதே நடிகைகள் அம்பிகா, ராதா, நதியா, ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், ரம்பா, ரோஜா, சிம்ரன், ஷாலினி, ஜோதிகா, நமீதா போன்ற முன்னணி நடிகைகள் திருமணம் செய்துகொண்டு, பிள்ளை களைப் பெற்றெடுத்து, அவர்களை வளர்த்து ஆளாக்கி வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பட்டியலில் இப்போது நடித்து வரும் ஒரு சில அபிமான நடிகைகளும் இணைவதற்குத் தயாராகி வருகிறார்கள்.
சுருதிஹாசன்: நடிகை, பாடகி என பன்முகத் தன்மை கொண்ட கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசனுக்கும் பிரபல `டூடூடல்' கலைஞரான சாந்தனு அசாரிகாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. மும்பையில் வசிக்கும் இந்த ஜோடி விரைவில் திருமணத் தேதியை அறிவிக்க உள்ளது.
தமன்னா: சுமார் இருபது ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாகத் தெரிகிறது. தமன்னா அண்மையில், தன்னுடன் நடித்த நடிகர் விஜய் வர்மாவைக் காதலிப்பதாகவும் அவர் தன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறி தன் காதலை வெளிப்படுத்தினார்.
அனுஷ்கா: நடிகை அனுஷ்காவும் பிரபாசும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் இருவரும் சினிமாவைத் தாண்டி அதிகம் நட்பு பாராட்டி வருகின்றனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என பலமாக மீண்டும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ராஷ்மிகா மந்தனா: விஜய் நடித்த `வாரிசு' மூலம் தமிழில் பிரபலமான ராஷ்மிகா மந்தனாவுக்கும் தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் என்பது சினிமா ரசிகர்களால் மறுக்கமுடியாத செய்தி. அண்மையில் இந்த ஜோடி மாலத்தீவு கடற்கரையில் ஒன்றாக விடுமுறையைக் கொண்டாடித் திரும்பி உள்ளது.
திரிஷா: திரிஷாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நிச்சயமாகி ரத்தானது. இப்போது வயது கூடிக்கொண்டே போவதால் சீக்கிரம் அவருக்குத் திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடி வருகிறார்களாம்.
ரகுல் ப்ரீத்சிங்: தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத்சிங். மும்பையில் வசித்துவரும் இவர், தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரரும் சினிமா தயாரிப்பாளருமான ஜாக்கி பகானானியை கரம்பிடிக்க உள்ளார்.
பிரியா பவானி சங்கர்: `மேயாத மான்' படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே ராஜவேல் என்பவரை பத்து ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். அண்மையில் தன் காதலையும் காதலரையும் வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்திய இவர், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
விமலா ராமன்: கே.பாலசந்தர் கடைசியாக இயக்கிய `பொய்' படத்தில் அறிமுகமான விமலா ராமன், `உன்னாலே உன்னாலே' படத்தில் அறிமுகமான வினய்யை தீவிரமாகக் காதலித்து வருகிறார். "இருவீட்டாரின் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடக்க உள்ளது. நல்ல செய்தி சீக்கிரத்தில் வரும்," என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் விமலா ராமன்.
அஞ்சலி: தற்போது ஐம்பதாவது படத்தை நெருங்கியுள்ள அஞ்சலி நீண்டகாலமாக ஜெய்யை காதலித்து வருவது ஊரறிந்த செய்தி. இருவரும் வெளிப்படையாக தங்கள் காதலை அறிவிக்கவில்லை என்றாலும் அவர்களின் காதல் புனிதமானது என்று அவர்களை நன்கு அறிந்த நண்பர்கள் வட்டாரம் கிசுகிசுக்கிறது.
திருமணத்துக்கு காத்திருக்கும் இந்த நடிகைகள் பட்டியலில் மறுமணத்துக்குத் தயாராகும் நடிகைகளும் அடங்குவர். அதன்படி, சமந்தா, அமலாபால், மீனா, சோனியா அகர்வால் உட்பட பல நடிகைகளும் மறுமணம் செய்துகொள்ளும் முடிவில் இருப்ப தாகவும் கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

