'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின், அடுத்து 'மாவீரன்' படத்துக்காக சிவகார்த்திகேயனுடன் கைகோத்துள்ளார். அறிமுகப் படத்திலேயே தேசிய விருதைப் பெற்ற வகையில் மடோன் அஸ்வின் குறித்த எதிர்பார்ப்பு தமிழ்த் திரையுலகில் அதிகரித்துள்ளது.
"'மண்டேலா' படம் வெளியானதும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா என்னைத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது சிவகார்த்திகேயன் அந்தப் படத்தை மிகவும் ரசித்துப் பார்த்ததாகக் கூறியபோது மகிழ்ச்சியாக இருந்தது.
"அருண் பேசி முடித்த சில நிமிடங்களில் சிவா கைப்பேசியில் அழைத்தார். 'மண்டேலா' படத்தில் தாம் ரசித்த அம்சங்கள், காட்சிகள் குறித்து அவர் விரிவாக விவரித்தபோது, அவரது பாராட்டு வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல என்பதும் ஒரு கலைஞனின் உண்மையான விமர்சனம் என்பதும் புரிந்தது. அவரது பாராட்டில் உண்மை இருப்பதை உணர்ந்தபோது பெருமிதமாகவும் இருந்தது," என்கிறார் மடோன் அஸ்வின்.
அந்த உரையாடலின்போது இருவரும் இணைந்துப் பணியாற்றலாமா? என்று சிவா கேட்க, அதற்கு மடோன் அஸ்வின் நன்றி தெரிவிக்க, அடுத்த நொடியே 'மாவீரன்' படத்துக்கு இருவரும் தயாராகிவிட்டனர்.
அதன் பிறகு தாம் ஏற்கெனவே தயார் நிலையில் வைத்திருந்த மூன்று கதைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சிவகார்த்திகேயனுக்காக புதுக் கதையை உருவாக்கிஉள்ளார் மடோன்.
'மண்டேலா' படத்தில் மிக எளிய மனிதர்களின் வாழ்வில் நுழைந்து, அவர்களின் சில நல்ல கணங்களை எடுத்துக்காட்டி பாராட்டு பெற்ற அவர், இம்முறை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் களமிறங்கி உள்ளார்.
'மாவீரன்' என்ற தலைப்பைக் கேட்டதும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இருக்குமோ என்ற எண்ணம் ரசிகர்களுக்கு ஏற்படக்கூடும். ஆனால் இதில் அடிதடிகள் இருக்குமே தவிர, முழுநீள சண்டைப் படம் என்று வகைப்படுத்திவிட முடியாது என்கிறார் இயக்குநர்.
"இந்தப் படமும் கற்பனைக் கதைதான். ஆனால், கதை நடக்கும் களமும் அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களும் மிக யதார்த்தமானவையாக இருக்கும்.
"நமது அண்டை வீட்டில் வசிக்கும் ஒரு பையனின் வாழ்க்கையில் நாம் ஆச்சரியப்படும் வகையில் திடீரென்று சில சம்பவங்கள் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதுதான் 'மாவீரன்' படம்.
"அவரது தோற்றம் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என விரும்பினோம். 'தளபதி' படத்தில் ரஜினி நீளமான தலைமுடி வைத்திருப்பார். அது சிவாவுக்கும் பொருத்தமாக இருந்தது. அதேபோல் படத்தலைப்பு குறித்து யோசித்தபோது, ரஜினி சார் ஏற்கெனவே நடித்திருந்த 'மாவீரன்' படம் நினைவுக்கு வந்தது. அதனால் அதைத் தேர்வு செய்தோம்.
"படம் தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குள் ஏன் இந்தத் தலைப்பைத் தேர்வு செய்தோம் என்பது புரிந்துவிடும். கதையோடு சம்பந்தப்பட்டதாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது. சிவாவுக்கான கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போது, கதைக்கு பொருத்தமாக எழுத வேண்டும் தமக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவை இல்லை என்றும் தெளிவாகச் சொல்லிவிட்டார்.
"எனது படத்தின் கதாநாயகன் என்பதற்காகச் சொல்லவில்லை. உண்மையாகவே சிவா மிகவும் அருமையான நடிகர். வணிகப் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார் என்றாலும், அவரால் கனமான கதாபாத்திரங்களையும் கையாள முடியும். உணர்வுபூர்வ மான நடிப்பிலும் நம்மைக் கவர்கிறார்," என்று பாராட்டுகிறார் மடோன் அஸ்வின்.
படத்தின் திரைக்கதை, காட்சி அமைப்பு தொடர்பாகவும் சிவா சில ஆலோசனைகளை வழங்கினாராம். அவை தமக்கு வெகுவாகக் கைகொடுத்ததாகச் சொல்கிறார். படத்தின் நாயகி அதிதி சங்கருக்கும் தனியாகப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் மடோன்.
"அதிதிக்கு தாம் பெரிய இயக்குநரின் மகள் என்கிற நினைப்பே கிடையாது. எல்லாரிடமும் மிக இயல்பாக, நட்பாகப் பேசிப் பழகுகிறார். நாயகி என்பதையும் மீறி அவரது கதாபாத்திரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
"படப்பிடிப்பின்போது அதிதி இருந்தால் ஒட்டுமொத்த படக்குழுவும் உற்சாகமாக இருக்கும். எந்நேரமும் குதூகலம், கொண்டாட்டம் என்று வலம் வருவார். அவரது நகைச்சுவைப் பேச்சும் அன்பான போக்கும் முதல் சந்திப்பிலேயே நம்மைக் கவரும்.
ஆனால் கேமராவுக்கு முன் வந்து நின்றால், அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு, கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்," என்கிறார் மடோன்.
, : தமிழகத்

