மூன்று குறிப்பிட்ட அழைப்பு விடுத்தால் மட்டும், கதையே கேட்காமல் நடிக்கத் தயார் என்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். 'மான்ஸ்டர்' படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், 'பொம்மை' படத்தை இயக்கிய ராதா மோகன், வெற்றி மாறன் ஆகிய மூவர்தான் அந்த இயக்குநர்கள் என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மூவரும் மிகுந்த திறமைசாலிகள். வெற்றிமாறன் இயக்கத்தில் நான் இதுவரை நடித்ததில்லை என்றாலும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இவர்களுடைய இயக்கத்தில் நடிக்கும்போது பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும். "தற்போது தமிழில் எனக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் அமைந்து வருகின்றன," என்கிறார் பிரியா.
வாழ்க்கையில் நாம் நினைப்பதுபோல் எல்லாம் நடந்துவிடாது என்கிறார் நடிகை சமந்தா.
தற்போது செர்பியா நாட்டுக்குச் சென்றுள்ள அவர், அங்குள்ள தேவாலயத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
"மனவலிமைக்காகவும் அமைதிக்காகவும்தான் பிரார்த்தனை செய்தேன். சில சமயம் பெரிய வெற்றி என்பது அவசியம் இல்லை. முன்னோக்கி நகர்வதையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன்.
"எல்லா நேரத்திலும் நாம் நினைப்பது எல்லாம் நடக்காது என்பதை கடந்த ஆண்டில் நான் கற்றுக் கொண்டேன். ஒரு சிலவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும், மீதத்தைக் கைவிட வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டுள்ளேன்.
"கடந்த காலங்களில் நடந்த சோகங்கள், தோல்வியை நினைத்து அதில் மூழ்கிவிடக்கூடாது. நாம் நேசிப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும்," என்று அண்மைய சமூக ஊடகப் பதிவில் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
'இந்தியன்-2' படப்பிடிப்பின்போது கமல் தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதைக் கண்டு ஒட்டுமொத்த படக்குழுவினரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.
தாம் ஏற்றுள்ள கதா பாத்திரத்துக்காக கமல் தினமும் நான்கைந்து மணி நேரத்தை ஒப்பனைக்காகவே செலவிடுகிறார். அந்த ஒப்பனையும்கூட ஆறு மணி நேரம் மட்டுமே கலையாதாம்.
அதற்குள் நாள்தோறும் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை திட்டமிட்டுப் படமாக்குகிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் எந்தவிதமான திட உணவுகளையும் அவர் சாப்பிட இயலாது. சில சமயங்களில் சிறிதளவு தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு நடித்துள்ளார் கமல். இந்த வயதிலும் சினிமாவுக்காக அர்ப்பணிப்புடன் அவர் இயங்குவது பிரமிக்க வைப்பதாக இந்தியன் பட இயக்குநர் சங்கர் பாராட்டுகிறார்.
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் படம் இயக்கப்போவது உறுதியாகி உள்ளது. ஆனால் அவரது அடுத்த படத்தின் கதாநாயகன் சிம்பு என்ற தகவல் உண்மை அல்ல. 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பின்போது சிம்புவை வைத்து படம் இயக்குவது குறித்து அவரிடம் விவாதித்தாராம் எஸ்.ஜே.சூர்யா. ஆனால், சிம்புவை இயக்குவது இன்னும் கைகூடவில்லை என்று அண்மையில் கூறியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
கிரிக்கெட் வீரர் டோனி தயாரிப்பில் உருவாகி உள்ள தமிழ் படம் 'எல்ஜிஎம்'. இப்படத்தின் முதல் பாடலை அண்மையில் வெளியிட்டனர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

