சுயநலத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய பதிவாகி உருவாகி உள்ளது 'தண்டட்டி' திரைப்படம்.
அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கும் இப்படத்தில் பசுபதி நாயகனாக நடித்துள்ளார். ரோகிணி, முகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், படப்பிடிப்பு நடைபெற்ற ஊரைச் சேர்ந்த சிலரையும் அறிமுகப்படுத்தி உள்ளாராம்.
"நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் குறித்து எழும் ஏராளமான கேள்விகளுக்கு நம்மிடம் பதில்கள் இல்லை. நம்மிடம் உள்ள அறப்பண்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
"நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையரைவிட பணம்தான் முக்கியம் என்று அலைகிறோம். அவ்வளவு ஏன், பணத்துக்காகவும் சொத்துக்காகவும் ஆசைப்பட்டு, தாய் தந்தையைக் கொலை செய்யும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
"அப்படிப்பட்ட சுயநலவாதிகளைப் பற்றி யதார்த்தம் கலந்த நகைச்சுவையுடன் இப்படத்தில் பதிவு செய்துள்ளேன். அதேசமயம் மனதைக் கலங்கடிக்கும் அம்சங்களும் இருக்கும்," என்கிறார் ராம் சங்கையா.
தமிழக கிராமப்புறங்களில் உள்ள மூதாட்டிகள் தண்டட்டி அணிவது வழக்கம். தங்களின் பாரம்பரியத்தையும் பெருமையையும் வெளிப்படுத்த தண்டட்டி உதவும் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.
தங்கப்பொண்ணு என்ற மூதாட்டியின் ஒட்டுமொத்த வாழ்க்கைதான் 'தண்டட்டி'
திரைப்படம்.
"சிறு வயதில் என் வீட்டுக்கு அருகில் தங்கப்பொண்ணு என்ற மூதாட்டி இருந்தார். அவரை எப்போதும் வம்புக்கு இழுப்போம். அவரும் எங்களை ஏசுவார்.
"ஒருமுறை ''ஏய் கெழவி... என்றாவது ஒருநாள் உன் காதில் உள்ள தண்டட்டியை அறுத்துவிடுவோம் பார்' என்று விளையாட்டாக மிரட்டப்போக, அன்று முதல் அந்தக் கெழவி தன் வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் படுப்பபதை நிறுத்திவிட்டார்.
"எங்கே நாங்கள் அந்த தண்டட்டியை அறுத்துக் கொண்டு போய்விடுவோம் என்று அவருக்கு அவ்வளவு பயம். அந்த அளவுக்கு என்பது எங்கள் வாழ்க்கையில் கலந்துவிட்ட விஷயம்.
"அம்மூதாட்டியின் கடைசிக்காலத்தில் அவர்பட்ட சிரமங்கள் என் மனதைப் பாதித்தது. அவர் அணிந்திருந்த 'தண்டட்டி'க்காகத்தான் அவரை வீட்டில் வைத்திருந்தனர். அந்தத் தண்டட்டியை யார் பெறுவது என்பதில் பிள்ளைகள் மத்தியில் போட்டி.
"இப்படி ஒவ்வொரு மூதாட்டியின் தண்டட்டிக்குள்ளும் ஒவ்வொரு கதை இருக்கிறது. இது எனக்குள்ளே பெரிய வலியை ஏற்படுத்தியது. அடுத்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் தண்டட்டி இருக்காது. அதனால்தான் இந்த விஷயத்தை எனது முதல் படத்திலேயே பதிவு செய்கிறேன்," என்கிறார் இயக்குநர் ராம் சங்கையா.
படத்தில் நடிகர் பசுபதி தலைமைக் காவலராகவும் கிராமத்து மூதாட்டியாக ரோகிணியும் நடித்துள்ளனர். தங்கப்பொண்ணு கதாபாத்திரம் இறந்தபிறகு அவரது தண்டட்டி காணாமல் போகிறது. அதைக் கண்டுபிடிக்க வருகிறார் பசுபதி. எந்தக் காரணத்துக்காகவும் ஊருக்குள் காவல்துறையை அனுமதிக்காத கிராமத்துக்குள் நுழைந்து பசுபதி அந்த தண்டட்டியைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் இப்படத்தின் கதை.

