தமிழ் சினிமாவில் தாம் சாதிப்பதற்கு நிறைய உள்ளது என்கிறார் நடிகை கெளரி கிஷன்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தனது நடிப்பில் மூன்று தமிழ்ப் படங்களாவது வெளியாகும் என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
'96' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கெளரி கிஷன். அதன் பிறகு 'மாஸ்டர்' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது இவரும் ஜிவி பிரகாஷும் இணைந்து நடித்துள்ள 'அடியே' படம் வெளியீடு காணத் தயாராக உள்ளது.
ஜி.வி.பிரகாஷ் காதல் கணை தொடுக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் 'வா செந்தாழினி' என்ற பாடல்தான் இப்போது இளையர்களால் அதிகம் கேட்டு ரசிக்கப்படுகிறது. சித் ஸ்ரீராம் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலைப் பல மில்லியன் பேர் கேட்டு ரசித்துள்ளனர்.
'திட்டம் இரண்டு' படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி உள்ளது 'அடியே' திரைப்படம்.
இப்படத்துக்காக வேறு ஒரு கதாநாயகியைத்தான் ஒப்பந்தம் செய்தனராம். அதன்பிறகு கௌரி நடித்தது யாருமே எதிர்பாராத ஒரு திருப்பம் என்கிறார் இயக்குநர்.
"ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிப்பவருக்கு தமிழில் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என விரும்பினோம். ஒருசில நாயகிகளின் பெயர்களைப் பரிசீலித்த பிறகு புதுமுகமாகத் தேடலாம் என முடிவாயிற்று.
"இந்தத் தேடலின்போது சிலர் தேர்வாகினர். அவர்களில் ஒரு நாயகியை ஒப்பந்தம் செய்ய முடிவாகி, சில புகைப்படங்களை எடுத்துப் பார்த்து, நாயகி கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பாரா என்று யோசித்தபோது மனநிறைவாக இல்லை," என்கிறார் விக்னேஷ் கார்த்திக்.
'அடியே' படக்குழு தம்மை முதலில் அணுகியபோது, கால்ஷீட் இல்லை என மறுத்துவிட்டதாகச் சொல்கிறார் கௌரி. அந்தச் சமயத்தில் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாராம்.
"என்னால் நடிக்க இயலாது என்று தெரிந்தபிறகே புது நாயகியைத் தேடுவதாக விக்னேஷ் கார்த்திக் கூறினார். அதன் பிறகு மற்ற பட வேலைகளில் மூழ்கிவிட்டேன். இந்நிலையில் மீண்டும் தொடர்புகொண்டார் விக்னேஷ். இதுவரை கதாநாயகி அமையவில்லை என்றும் ஒருவேளை என்னிடம் கால்ஷீட் இருந்தால் நடிக்கலாம் என்றும் கூறினார்.
"ஏற்கெனவே அவர் கூறியிருந்த கதையும் அதில் எனக்கான கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. கால்ஷீட் பிரச்சினையால்தான் தேடி வந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை.
"ஆனால் அவர் மீண்டும் பேசியபோது சில மாற்றங்கள் காரணமாக கால்ஷீட் இருந்தது. உடனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்," என்கிறார் கௌரி.
இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததாக ஒட்டுமொத்த படக்குழுவும் பாராட்டு தெரிவித்ததாம். நாயகன் ஜிவி பிரகாஷும் தன் பங்குக்குப் பாராட்டி உள்ளார்.
"இந்தப் படம் எனது திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாக இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்களின் கருத்தும் விமர்சனமும் எப்போதுமே துல்லியமாக இருக்கும். 'அடியே' படத்தில் பணியாற்றிய அக்கலைஞர்கள் அனைவருமே என்னைப் பாராட்டியதை மிகப்பெரிய விருதுக்குச் சமமானதாகக் கருதுகிறேன்," என்கிறார் கௌரி.
சரி... படத்தின் கதை என்ன?
"இது அறிவியல் கலந்த காதல் கதை. படம் முழுவதும் காதல் நிரம்பி வழியும். அதே சமயம் ஜாலியான அம்சங்களும் ஆச்சரியப்படுத்தும் அம்சங்களும் நிறைந்திருக்கும்," என்கிறார் இயக்குநர்.
, :
தமிழகத்

