திரையுலகில் தாம் செலவிடும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவிப்பதாகச் சொல்கிறார் இளம்நாயகி ஸ்ரீலீலா.
முன்னாள் கலைஞர்கள் பெரும் சாதனைகளைப் புரிந்துள்ள நிலையில், தாம் புதிதாகச் சாதிக்க ஏதுமில்லை என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘பெல்லி சண்டாடி’ என்ற ஒரே படத்தின் மூலம் ஸ்ரீ லீலாவை தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகியாக உயர்த்திவிட்டனர் ரசிகர்கள். இத்தனைக்கும் அதுதான் தெலுங்கில் அவரது அறிமுகப்படம்.
அடுத்து, ‘மாஸ் மகாராஜா’ என்றழைக்கப்படும் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ‘தமாக்கா’ என்ற படத்தில் நடித்தார் ஸ்ரீலீலா. அதில் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து கிறங்கிப் போயினர் ரசிகர்கள்.
அதன் பிறகு ஸ்ரீலீலா என்ன கேட்கிறாரோ, அதுதான் அவரது சம்பளம். தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவரிடம் பேரம் பேசுவதே இல்லை. தற்போது கைவசம் ஒன்பது படங்கள் வைத்துள்ளார் ஸ்ரீலீலா.
மகேஷ் பாபு, பவன் கல்யாண், விஜய் தேவரகொண்டா, ராம் பொத்தினேனி என அனைத்து முன்னணி நாயகர்களுக்கும் ஸ்ரீலீலாதான் ஜோடி.
“நான் கிஸ் என்கிற கன்னடப் படம் மூலம்தான் திரையுலகில் அறிமுகமானேன். இருபத்து இரண்டு வயதாகிறது. பிறந்தது அமெரிக்காவில் என்றால் வளர்ந்து ஆளான இடம் பெங்களூரு. மருத்துவம் படிக்கிறேன்.
“திரையுலகில் பணியாற்றுவதில் விருப்பம் உள்ளதால் நடிகையானேன். என்னைப் பொறுத்தவரை சினிமாவில் நான் பெரிதாகச் சாதிக்க ஒன்றுமில்லை என்பது உண்மைதான். எனினும் என்னால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் உறுதியாகச் சொல்வேன்,” என்கிறார் ஸ்ரீலீலா.
தொடர்புடைய செய்திகள்
எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தயக்கமின்றி ஏற்றுக்கொள்பவர், தனது பாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை தொடக்கத்திலேயே நிபந்தனையாக முன்வைக்கிறார்.
“ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு வேடங்கள் அமைந்தால் மகிழ்வேன். ஏனெனில் ஒரே மாதிரியாக நடித்துக்கொண்டிருந்தால் போரடித்துவிடும்.
“ஒருநாள் பக்கத்து வீட்டுப் பெண்ணாக நடித்தால், மற்றொரு படத்தில் திமிர் பிடித்தவளாக தோற்றமளிக்க வேண்டும். இவ்வாறு நாள்களைக் கடத்துவது மிக சுவாரசியமாக இருக்கும். மேலும், புதிதாக ஏதாவது செய்வதற்கான தூண்டுதலாகவும் அமையும்,” என்கிறார் ஸ்ரீலீலா.
தென்னிந்திய முன்னணி நடிகைகளுக்கான பட்டியலில் இவருக்குத்தான் முதலிடம் என்று ஸ்ரீலீலாவின் ரசிகர்கள் மார்தட்டுகின்றனர். இதற்கு ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்கள் கோபப்படுகிறார்கள். ஆனால் இதுபோன்ற சர்ச்சைகள் குறித்து ஸ்ரீலீலா வாய்திறப்பதே இல்லை.
“நான் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவள். எனக்கான வாய்ப்புகள் எந்தவிதத் தடையும் இன்றி என்னைத் தேடி வருகின்றன. நான் முன்பே குறிப்பிட்டபடி, எனது தொழிலில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறேன்.
“என்னால் யாருக்கும் இழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். நான் யாரையும் போட்டியாகக் கருதவில்லை. அதேசமயம் பிறர் என்னைப் போட்டியாகக் கருதுகிறார்கள் எனில் அதற்கு நான் பொறுப்பல்ல,” என்கிறார் ஸ்ரீலீலா.
கடந்த ஆண்டு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்துள்ள இவருக்கு சமூக சேவைகளில் மிகுந்த நாட்டம் உண்டாம். எல்லாரும் தங்களால் இயன்ற உதவிகயைப் பிறர்க்கு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்.
“சமூகத்தில் ஒரே நாளில் பெரிய மாற்றங்களை நிகழ்த்திவிட முடியாது. ஆனால் நாம் மனது வைத்தால் ஒவ்வொரு கட்டமாக சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தலாம்,” என்கிறார் ஸ்ரீலீலா.


