தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிம்பு, தனுஷ் உட்பட ஐந்து பேருக்கு தடை

2 mins read
762bc51f-e786-4476-9de4-2810da13a7ea
நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு (இடது), தனுஷ் - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்கள் ஐந்து பேருக்கு தடைவிதிக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவல் கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனி ஐந்து பேரையும் புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்வதாக தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அண்மைய பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்திருப்பது திரையுலகில் புதிய விவாதங்களையும் எழுப்பி உள்ளது.

ஒரு படத்தில் நடிப்பதற்கு தயாரிப்பாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு வராமல் தாமதிப்பது, பின்னணிக் குரல் பதிவு உள்ளிட்ட பணிகளில் ஒத்துழைக்க மறுப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அக்குறிப்பிட்ட ஐந்து நடிகர்களும் எதிர்நோக்கி உள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கம் குறிப்பிட்டுள்ள அந்த ஐந்து பேர் பட்டியலில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் அவர்கள் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வெளிவரவில்லை.

தயாரிப்பாளர் சங்கமும் அந்த ஐந்து பேரின் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் நானூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஐந்து நடிகர்களுக்கும் தடைவிதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் முதற்கட்டமாக அவர்களை புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்யும் முன்பு தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள் ஒத்துழைக்காத பட்சத்தில், ஐவருக்கும் தடைவிதிப்பதற்கான சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. எனினும் சிம்பு, தனுஷ், விஷாலுக்கு தடைவிதிக்கப்படுவதாக வெளியான தகவலை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமி உறுதி செய்யவில்லை.

தொடர்புடைய செய்திகள்

“நடிகர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்க இயலும். ஆனால், அந்த ஐந்து பேருமே சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். பெயர்களை வெளியிட்டால் அந்தப் படங்களுக்கும் அவற்றைத் தயாரிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். அது மட்டுமல்ல, குறிப்பிட்ட ஐந்து பேரைத் தவிர மேலும் சில நடிகர்கள் மீதும் சில புகார்கள் உள்ளன,” என்கிறார் முரளி ராமசாமி.

இந்த விவகாரம் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு நன்கு தெரியும் என்றும் வெளிநாட்டில் உள்ள அச்சங்கத்தின் தலைவர் நாசர் சென்னை திரும்பியதும் இதுகுறித்துப் பேசப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி