இசைமழையில் நனைக்க வரும் ஆண்ட்ரியா

3 mins read
8694882c-c404-44aa-84eb-d5755646ef2a
செய்தியாளர் சந்திப்பிற்கு வருகைதந்த ஆண்ட்ரியா. - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரெமையாவின் நேரடி இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.

இதற்காக கடந்த சனிக்கிழமை, ஜூன் 18ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டார்.

பல ஆண்டுகளுக்குமுன், முதன்முதலாக ஆண்ட்ரியா நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தியது சிங்கப்பூரில்தான். மீண்டும் அதுபோன்ற ஓர் இசை நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.

தமிழில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘அந்நியன்’ படத்தில் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ என்ற பாடல் மூலமாகத் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா ஜெரெமையா.

இளம் வயதிலிருந்தே பாடகியாக வேண்டும் என்று கனவு கண்ட இவர், ஆங்கிலோ-இந்திய குடும்பத்தைச் சேர்ந்தவர். எட்டு வயதிலேயே பியானோ பயிலத் தொடங்கிவிட்டார்.

2010ஆம் ஆண்டில் வெளியான ‘கோவா’ படத்தில் இவர் பாடிய ‘இதுவரை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் பாடிய ‘உன் மேல ஆசைதான்’ போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றன. இதனால் புகழும் சேர்ந்தது.

2007ஆம் ஆண்டில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் ஜோதிகா, சரத்குமார் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஆண்ட்ரியாவும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாகவும் அடியெடுத்து வைத்தார்.

தொடர்ந்து நடித்த படங்களும் பாடிய பாடல்களும் ரசிகர்களிடையே இவருக்கு நல்ல ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளன. தீரமுள்ள கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதால் இளையர்களிடத்திலும் இவருக்கு நல்ல ஆதரவு உண்டு .

கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்ந்தபின் முதல் முறையாக தமது நேரடி இசை நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் வந்துள்ளார் ஆண்ட்ரியா. சிங்கப்பூர் ரசிகர்களை தமது இசைமழையில் நனைக்க ஆர்வமாக இருக்கிறார்.

மேடையில் தம் இசைக்குழுவுடன் இணைந்து மக்களுக்காகப் பாடுவதுதான் தமக்கு எப்பொழுதும் மனநிறைவு அளிக்கும் பணி என்கிறார் ஆண்ட்ரியா.

இம்முறை இசை நிகழ்ச்சியில் சிறப்பு கவனம் எடுத்து ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருபவர், புதிய உத்திகளைப் பயன்படுத்தி, பார்வையாளர்களுக்கு எவ்வாறு சிறந்த நிகழ்ச்சி அனுபவத்தை வழங்கலாம் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

கல்லூரிப் படிப்பை முடித்த கையுடன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய ஆண்ட்ரியா, பல பெரிய நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்துள்ளார். ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்ததாகக் கூறுகிறார்.

திரையுலகம் சார்ந்த அம்சங்கள் தொடர்பில் நடிகர் கமல்ஹாசனிடம் உள்ள குழந்தையைப் போன்ற ஆர்வத்தை வேறு எந்த நடிகரிடமும் தாம் கண்டதில்லை என்று ஆண்ட்ரியா குறிப்பிட்டார்.

இவர் இயக்குநர் மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றிய ‘பிசாசு 2’ திரைப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. தரமான அந்தப் படைப்பைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பதாக கடந்த சனிக்கிழமை, ஜூன் 18ஆம் தேதி, நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆண்ட்ரியா தெரிவித்தார்.

தொடர்ந்து, திரைப்படங்களில் படைப்பாக்கத் தயாரிப்பாளர் பொறுப்பை ஏற்று பங்களிக்கவும் உயர்தர உணவகம் ஒன்றை நிறுவவும் இவர் திட்டமிட்டுள்ளார்.

ஜூலை 8ஆம் தேதி நடைபெறவிருக்கும் ‘ஆண்ட்ரியா லைவ் இன் சிங்கப்பூர்’ இசை நிகழ்ச்சியில் சிங்கப்பூர் இளம் ‘ராப்’ பாடகர் யங் ராஜாவும் பாடவுள்ளார்.

ஆண்ட்ரியாவின் நேரடி இசை நிகழ்ச்சியைக் காண சிங்கப்பூர் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி