‘தண்டட்டி’ தமிழ்ப் படத்துக்காக முப்பது நாள்கள் சடலமாக (பிணமாக) நடித்ததாகச் சொல்கிறார் நடிகை ரோகிணி.
இப்படத்தில் தங்கப்பொண்ணு என்ற மூதாட்டி கதாபாத்திரத்தில் நடித்தது சவாலான அனுபவமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
“பிணமாக நடிக்கிறீர்களே என்று சிலர் என்னிடம் துக்கம் விசாரித்தனர். இதுகுறித்து நான் கவலைப்படவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு இதுபோன்ற கதாபாத்திரங்கள் மகிழ்ச்சி அளிக்கும்.
“மிகப்பெரிய தண்டட்டியை அணிந்துகொண்டு திரையில் நான் வலம் வரும் காட்சிகளை மிகவும் ரசித்தேன். இதுபோன்ற சவாலான கதாபாத்திரங்களும் கதைச்சூழலும் அமையும்போதுதான் கலைஞர்களின் உண்மையான திறமை வெளிப்படும்.
“எனவே இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும்போது அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்கிறார் ரோகிணி.
இதனிடையே, ரோகிணி மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்ததாக தண்ட்டி படத்தின் இயக்குநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதனால் ரோகிணி சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தண்டட்டி’ படத்தில் தலைமைக் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் பசுபதி. ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்குப் பிறகு மீண்டும் தமக்கு கனமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாகவும் அதற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

