நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது அமெரிக்க ரசிகர்களும் பலவிதமாகக் கொண்டாடி வருகின்றனர். நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ஒளித்திரையில் விஜய்யின் பல்வேறு சுவரொட்டிகள் அடங்கிய காணொளி ஒளிபரப்பப்பட்டது.
நடிகர் விஜய்க்கு ஜூன் 22 பிறந்த நாளாகும். இதையொட்டி கடந்த இரு நாள்களாக விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு ஊர்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தனர்.
ஏழைகளுக்கு இலவச உணவு, அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம், ரத்த தான முகாம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
“இவையெல்லாம் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகள்தான். எனினும் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வழக்கத்தைவிட அதிக மக்களுக்கு உதவி செய்துள்ளோம்,” என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
விஜய் மிக விரைவில் அரசியல் பிரவேசம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி அதிரடி வசனங்களுடன் கூடிய சுவரொட்டிகளை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

