சென்னை: தமிழகத்தில் இனி பெண்கள் பயமின்றிப் பாதுகாப்பாக வெளியே சென்று வர முடியும் என்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் விதமாக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இனி இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை பெண்களை எந்த இடத்துக்கும் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல சுற்றுக்காவல் வாகனங்கள் பயன்படுத்தப்படும் என காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் பெண்கள் இருக்கும் இடத்திற்கே வந்து சுற்றுக்காவல் வாகனம் அழைத்துச் செல்லும்.
அனைத்து நாள்களிலும் இந்தச் சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
“பணி நிமித்தமாக அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக பெண்கள் இரவு நேரத்தில் வெளியே செல்ல வேண்டிய அவசியம் எழக்கூடும். எனினும் அச்சமயம் வெளியே செல்ல அச்சமாக இருப்பின் பெண்கள் தயங்காமல் காவல்துறையை அணுகலாம்.
பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயக்கப்படும் சுற்றுக்காவல் வாகனங்கள் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவர்,” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.