கணவர் கொலை மிரட்டல் விடுப்பதாக சின்னத்திரை நடிகை காவல்துறையில் புகார்

கணவர் கொலை மிரட்டல் விடுப்பதாக சின்னத்திரை நடிகை காவல்துறையில் புகார்

2 mins read
b43eb7e7-7954-4c68-82af-df0a9bd89108
கணவர் தினேஷுடன் ரட்சிதா - படம்: ஊடகம்

சென்னை: கைப்பேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலட்சுமி தனது கணவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள ரட்சிதா, சின்னத்திரை நேயர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து மணம் புரிந்தார்.

இதையடுத்து சென்னையில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருவரும் குடித்தனம் நடத்தி வந்தனர். எனினும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

இதனால் சேர்ந்து வாழ முடியாத நிலையில், இருவரும் பிரிந்தனர்.

ரட்சிதா தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் சில போட்டிகளில் பங்கேற்பது, நடுவராக இருப்பது என அவருக்குப் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை மாங்காடு மகளிர் காவல் நிலையத்தில் அவர் தனது கணவர் தினேஷ் மீது கொலை மிரட்டல் புகார் அளித்தார்.

தமது கணவரைப் பிரிந்து வாழும் நிலையில் தினேஷ் தனது கைப்பேசியில் தொடர்ந்து ஆபாச தகவல்களை அனுப்புவதாகவும் அவ்வப்போது கைப்பேசியில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து தினேஷை செவ்வாய்க்கிழமை அன்று காவல்துறை விசாரித்தது. அப்போது தன் மீதான புகார்களை மறுத்த அவர், வேண்டுமானால் ரட்சிதா மண முறிவுக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றார்.

ரட்சிதா தன் கணவர் மீது அளித்த புகார் காரணமாக சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பு நிலவியது.

சின்னத்திரை கலைஞர்கள் பலரும் தமக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருப்பதாக ரட்சிதா தரப்பில் கூறப்படுகிறது.

தன் மீதான புகார்களை ரட்சிதாவின் கணவர் தினேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதனிடையே இருவரையும் மீண்டும் இணைத்து வைக்க நண்பர்கள் சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ரட்சிதா காவல்துறையில் அளித்துள்ள புகார் காரணமாக தினேஷ் அவர் மீது கோபமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி