தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாந்தி திரையரங்கம்பற்றிய நினைவலைகள்

2 mins read
f5d4c4ac-0469-4608-9629-60cd0adfca7f
சாந்தி திரையரங்கத்தை கட்டிய ஜி. உமாபதியின் மகன் கருணாகரன் அனுபவம். - படம்: தினத்தந்தி

சாந்தி தியேட்டரைக் கட்டிய பிரபல பட அதிபர் ஜி.உமாபதியின் மகன் யு.கருணாகரன் சில நினைவலைகளை தமிழகத்தின் தினத்தந்தி ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டார்.

“சாந்தி தியேட்டர் கட்டுமான பணிகள் தொடங்கியபோது எனக்கு வயது 14. கட்டடப் பணிகள் 1960ஆம் தொடங்கி 1961ஆம் ஆண்டில் முடிவடைந்தது.

“என் தந்தை உமாபதியும் சிவகங்கை சமஸ்தான ராஜாவான சண்முகராஜாவும் இணைந்து இந்தத் திரையரங்கத்தைக் கட்டினார்கள். ‘தூய உள்ளம்’தான் முதல் படம். 1,250 இருக்கைகளை அமைத்திருந்தோம். தமிழகத்திலேயே அதிக இருக்கைகளைக் கொண்ட அரங்கமாக சாந்தி தியேட்டர் புகழ்பெற்றது. பால்கனியில் மட்டுமே 450 இருக்கைகள் இருந்தன. இத்தனை பால்கனி இருக்கைகள் கொண்ட தியேட்டரை தமிழகம் மட்டுமல்ல ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் இல்லை. மும்பையில் உள்ள ‘மராத்தா மந்திர்’ என்ற திரையரங்கத்தைப் பார்த்து, அதில் உள்ள சிறப்பு அம்சங்களை சாந்தி திரையரங்கில் சேர்த்தோம். இந்தப் பணிகளை ‘பென் என்ஜினீயரிங்’ நிறுவனத்தார் முடித்தனர். இதற்கும் மேலாக ‘பாசமலர்’, ‘பாவ மன்னிப்பு’, ‘பாத காணிக்கை’ போன்ற சிவாஜிகணேசன் நடித்த ‘பா’வில் தொடங்கிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன.

சிவாஜி நடித்த ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கும் போது, அவரது இன்னொரு படம் வெளியாகும். இதனால் எம்ஜிஆர் படங்களைக்கூட திரையிட முடியாத சூழல் நிலவியது. சாந்தி திரையரங்கம், சென்னைக்கே ஒரு அடையாளமாக இருந்தது. தென்னிந்திய சினிமாவை விரும்புபவர்கள், ஏன் சென்னை வருபவர்கள்கூட சாந்தி தியேட்டரைப் பார்க்காமல் போகவே மாட்டார்கள். அப்படியொரு அடையாளத்துடன் சாந்தி தியேட்டர் திகழ்ந்தது.

சிவாஜிகணேசன் விரும்பியதால், சாந்தி தியேட்டரை அவருக்கே அப்பா கொடுத்துவிட்டார். அதே வேளை உடனடியாக அதே சாலையில் 20 கிரவுண்ட் இடத்தை வாங்கி, ஒரு திரையரங்கத்தைக் கட்டினோம். ஆனந்தமாக இருக்கவேண்டும் என்பதால், என் தம்பி பெயரில் ஆனந்த் திரையரங்கம் என்று அதற்கு பெயர் சூட்டினோம். முதலில் சாந்தி திரையரங்கத்துக்கு ‘மனசாட்சி’ என்று பெயர் வைக்க யோசித்தோம். பின்னர் சாந்தி என்ற பெயரை தேர்வு செய்தோம். சாந்தி என்பது என் தங்கையின் பெயர். சிவாஜி கணேசனின் மகள் பெயரும் சாந்தி என்பதால் விலைக்கு விற்ற பின்னரும் அந்த தியேட்டரில் இருந்து சாந்தி என்ற பெயர் மாறவில்லை என்று யு. கருணாகரன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி