விஜய் பிறந்த நாளில்‘லியோ’ முதல் தோற்றம்

3 mins read
422836ce-9a48-4791-90bb-586c6c12e7c3
லியோ படத்தின் முதல் தோற்றம் - படம்: தமிழக ஊடகம்

நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரியமுடன், கில்லி, பிகில், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய், தனது 49வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். விஜய்யின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்,

திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை வெளியிட்டனர்.

இதற்கிடையே அவரது அடுத்த படமான லியோ படத்தின் முதல் தோற்ற சுவரொட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியானது.

கமல் நடித்த விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைகிறார்.

இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம், வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாண்டு அக்டோபரில் லியோ வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் லியோ படத்தின் ‘பர்ஸ்ட்லுக்’ சுவரொட்டி நடிகர் விஜய்யின் பிறந்த நாளான நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது.

இதனை விஜய்யின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டாடினர்.

நடிகரும், விஜய்யின் உறவினரான விக்ராந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விஜய்யின் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்தார். இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை ரத்த தான முகாம்கள், இலவச உணவு என பல சமூக நடவடிக்கைகள் மூலம் ரசிகர்கள் கொண்டாடினர்.

குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் ராமன் புதூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

விஜய்க்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மேலும் விஜய்யுடன் தான் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பதிவில் இணைத்துள்ளார். நடிகை ராதிகா சரத்குமார், விஜய்யுடன் எடுத்துக் கொண்ட அண்மைய புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்.

கிராபிக் டிசைனரான மேடி மாதவன் என்பவர். விஜய்யை தத்ரூபமாக 3டி அனிமேஷனில் உருவாக்கி சினிமா காட்சிகளுக்கு ஈடாக தயாரித்துள்ளார். இந்த வீடியோவை மேடி மாதவன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.. இது உங்களுக்காக” என்ற பதிவுடன் பகிர்ந்துள்ளார்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வாரிசு படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த ரேர் பிக்கை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

பிகில் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், நடிகர் ஆர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜய்யை வாழ்த்தியிருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி