உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் ஜூன் மாதம் 29ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது. இதுவே தனது கடைசிப் படமாக இருக்கும் என்று உதயநிதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கே. எஸ். அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தில் உதயநிதி நடித்து வந்தார்; அதற்கான படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் ‘மாமன்னன்’ வெளிவந்தால் அது தங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அப்படத்தைத் தயாரிக்கும் ஓ. எஸ். டி ஃபிலிம்ஸ் நிறுவனம் கூறியது. அதனால் ‘மாமன்னன்’ படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரி அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்குள் பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு உதயநிதி, ஓ. எஸ். டி ஃபிலிம்ஸ் இருதரப்புக்கும் நீதிபதி குமரேஷ்பாபு உத்தரவிட்டுள்ளார்.

