கண்ணீர்ப்பதிவு: உணவுக்குக்கூட வழியின்றித் தவிக்கும் நட்சத்திரத் தயாரிப்பாளரின் பேத்தி

கண்ணீர்ப்பதிவு: உணவுக்குக்கூட வழியின்றித் தவிக்கும் நட்சத்திரத் தயாரிப்பாளரின் பேத்தி

2 mins read
39a2434b-f144-4d8c-93b1-f70234d53e2b
புவனி - படம்: ஊடகம்

ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் நட்சத்திர தயாரிப்பாளராக கொடிகட்டிப் பறந்தவர் ஜிஎன் வேலுமணி. சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் நடித்த பல படங்களைத் தயாரித்தவர் என்பதால் நட்சத்திர தயாரிப்பாளராகக் கருதப்பட்டவர்.

இன்று அவரது பேத்தி புவனி மூன்று வேளை உணவுக்குக்கூட வழியின்றி பிறரது உதவியை எதிர்பார்க்க வேண்டிய பரிதாப நிலையில் உள்ளார்.

“தமிழக முதல்வரை நேரில் சந்தித்து எனக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப் போகிறேன்,” என்று புவனி கூறியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த 1970களில் ஜிஎன் வேலுமணி தமது ‘சரவணா ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரித்த ‘பாகப்பிரிவினை’, ‘பாலும் பழமும்’, ‘படகோட்டி’, ‘குடியிருந்த கோவில்’, ‘சந்திரோதயம்’ உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன.

வேலுமணிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருந்தனர். மகன் சரவணன் பெயரில்தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். வசதியாக இருந்தபோதே இரு மகள்களுக்கும் திருமணத்தை நடத்திவிட்டார்.

வேலுமணி காலமான ஒன்றரை ஆண்டுகளிலேயே அவரது மகன் சரவணன் காலமாகி விட்டது பெரும் சோகம். அதன் பின்னர் சரவணனின் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியது.

இந்நிலையில் சரவணனின் மனைவி சாந்தி அண்மையில் காலமானார். கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த சாந்தியின் மருத்துவச் செலவுக்கே குடும்பம் மிகவும் சிரமப்பட்டதாகச் சொல்கிறார் வேலுமணியின் பேத்தி புவனி.

“எங்களுக்கு சொந்தமான திரையரங்கம் இருந்தது. வேறு பல சொத்துகளும் இருந்தன. ஆனால் தாத்தா வேலுமணி இறந்தபிறகு நிலங்களையும் சொத்துகளையும் சிலர் ஏமாற்றிப் பறித்துவிட்டனர். அதன் பிறகு நானும் அம்மாவும் சென்னையில் வாடகை வீட்டில் வசித்தோம். சாப்பாட்டுக்கே வழியில்லை என்ற நிலையில் ஜெயலலிதா அம்மா முதல்வராக இருந்தபோது நேரில் சந்தித்து கஷ்டத்தை தெரிவித்தேன்.

“ஏன் முன்பே தம்மிடம் மனு அளிக்கவில்லை என்று வருத்தப்பட்ட அவர், ஆவன செய்வதாகக் கூறினார். மறுவாரமே அவர் உடல்நலம் குன்றி, பிறகு காலமாகிவிட்டார்,” என்று கண்ணீர்மல்க சொல்லும் புவனி, இப்போது தனது தாயாரையும் இழந்து விட்ட நிலையில் உணவுக்கே சிரமப்படுகிறார்.

“இப்போதுள்ள சூழலில் எனக்கு உணவுக்கே வழி இல்லை. அதனால் நான் எதிர்பார்க்கும் சின்ன உதவி கிடைத்தாலே போதுமானது,” என்கிறார் புவனி.

குறிப்புச் சொற்கள்