தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட் படம், பயிற்சித் திடல், மையம்: யோகிபாபுவின் விருப்பம்

2 mins read
2b65afac-4ab5-4a61-a88f-72b9a6b0f58f
யோகிபாபு (இடது), நடராஜன் - படம்: ஊடகம்

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் யோகிபாபு.

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரில் கிரிக்கெட் திடல் ஒன்றை அமைத்துள்ளார்.

அங்கு இளம் கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நடராஜன் கிரிக்கெட் திடல் வெள்ளிக்கிழமை திறப்பு விழா கண்டது. தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திடலைத் திறந்துவைத்து நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். அதேபோல் திரையுலகைச் சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலர்களான நடிகர்கள் யோகிபாபு, நடிகர் புகழ் ஆகியோரும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யோகிபாபு, தமக்கும் நிறைய இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

“நடராஜனைப் போல் நானும் ஒரு கிரிக்கெட் திடலும் பயிற்சி மையமும் அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஐபிஎல், டிஎன்பிஎல் உள்ளிட்ட போட்டிகளில் ஏராளமான இளையர்கள் விளையாடுகின்றனர். எல்லாரிடமும் திறமை உள்ளது. அவர்களை ஊக்குவிக்க வேண்டும்,” என்றார் யோகிபாபு.

வீரேந்திர சேவாக் தான் தமக்குப் பிடித்தமான கிரிக்கெட் வீரர் என்று குறிப்பிட்ட அவர், சேவாக்குக்கு அடுத்தபடியாக நடராஜைப் பிடிக்கும் என்றார்.

“அடுத்து கிரிக்கெட் தொடர்பான படத்தில் நடிக்க உள்ளேன். அது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்தமான படமாக இருக்கும்,” என்று யோகிபாபு மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்