‘தங்கலான்’ படத்தில் அருமையான கதாபாத்திரம் அமைந்ததாகச் சொல்கிறார் நடிகை பார்வதி.
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமக்கு மிகுந்த மனநிறைவு அளித்துள்ள கதாபாத்திரம் என்றும் சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த சில நாள்களாக ‘தங்கலான்’ படப்பிடிப்பில் நடித்து வந்தேன். இப்போது எனக்கான காட்சிகளை முடித்துவிட்டேன்.
“வேகமாக செல்லும் காரின் பிரேக்கை திடீரென்று பிடித்து நிறுத்துவது போன்று இந்தப் பயணம் முடிவுக்கு வந்து இருக்கிறது. எப்போதாவது இது முடியத்தான் வேண்டும். எனினும் பணம், புகழை தாண்டி உண்மையாகப் பணியாற்றிய மனநிறைவை கொடுத்துள்ளது இந்தப் படம்.
“ரசிகர்களைப் போல் நானும் இந்தப் படத்தை திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். விக்ரம், பா.ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி,” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் பார்வதி.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ளது ‘தங்கலான்’ படம். கோலார் தங்கவயலில் பணி செய்த தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.
தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள பார்வதிக்கு தமிழில் இன்னும் சவாலான கதாபாத்திரங்கள் அமையவில்லை எனும் ஆதங்கம் உள்ளது.

