நடிகர்கள் தனுஷும் பார்த்திபனும் தாங்கள் முன்பே நடித்த படங்களின் இரண்டாம் பாகங்களுக்குத் தயாராகி வருகின்றனர்.
தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதையடுத்து ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் புதிய இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இருவரும் ஏற்கெனவே ராஞ்சனா இந்திப் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
இந்நிலையில் ராஞ்சனா படம் குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார் தனுஷ். அதில், அந்தப் படம் வெளியாகி பத்து ஆண்டுகள் ஆகிறது என்றும் அத்தகைய சில படங்கள் ஒருவரது வாழ்க்கையை மாற்றக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அப்படிப்பட்ட படம்தான் ‘ராஞ்சனா’. அதை அருமையான வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி,” என்று தனுஷ் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனுஷ் இந்தியில் அடுத்து நடிக்க இருப்பது ‘ராஞ்சனா’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ‘புதிய பாதை’ படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என்று அறிவித்துள்ளார் பார்த்திபன்.
“தற்போது தயாராகி வரும் படம் முடிந்ததும் ‘புதிய பாதை’ இரண்டாம் பாகம் உருவாகும்,” என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.
தொடர்புடைய செய்திகள்
‘புதிய பாதை’ படம் கடந்த 1989ஆம் ஆண்டு திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றது.
பார்த்திபனே நாயகனாக நடித்து இயக்கிய படம் இது. சீதா நாயகியாக நடித்திருந்தார்.


