தென்னிந்திய திரையுலகில் தற்போது படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நாயகன், நாயகிகள் மட்டுமல்லாமல் புது முகங்களை வைத்தும் பல்வேறு படங்கள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில், சில கதாநாயகிகள் அடுத்து நடிக்க உள்ள படங்கள் குறித்துப் பார்ப்போம்.
அடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் கீர்த்தி சுரேஷ். இவருக்கு முன்பாக இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன்தான் நடிக்க இருந்தார். இந்நிலையில் திடீரென கதாநாயகியை மாற்றி உள்ளனர்.
சந்து மோண்டேட்டி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை மட்டும்தான் நடைபெற்று வந்தது என்றும் தம்மை நீக்கவில்லை என்றும் அனுபமா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு பறிபோனதால் தமக்கு கீர்த்தி சுரேஷ் மீது வருத்தம் இருப்பதாக வெளியான தகவலையும் அனுபமா மறுத்துள்ளார்.
நாக சைதன்யா அண்மையில் நடித்த சில படங்கள் தோல்வி கண்டுள்ளன. எனவே அடுத்த படத்துக்கான வியாபாரம் கடினமாக இருக்கும் என்பதால் படத்தின் நட்சத்திர மதிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே கீர்த்தியை ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷைப் பொறுத்தவரையில் அவரது கடைசி இரண்டு தெலுங்குப் படங்களும் வசூல், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனால் தெலுங்கில் அவரது சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.
♦ ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் புதுப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் இந்துஜா.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இப்படத்துக்கு ’பார்க்கிங்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்க, முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“இது ஒருவகையில் திகில் படம். மற்ற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது,” என்கிறார் இந்துஜா.
♦ சிவகார்த்திகேயனின் 22ஆவது படத்தில் இந்தி நடிகை மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவாவின் அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கி உள்ளன. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
மிருணால் தாகூர் ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். தயாரிப்புத் தரப்பு முதலில் அணுகியபோது கால்ஷீட் இல்லை என ஒதுக்கிவிட்டாராம் மிருணாள்.
பிறகு சிவகார்த்திகேயன் தரப்பில் தொடர்புகொண்டு பேசியதும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
♦ இதனிடையே, நடிகை திரிஷா மீண்டும் இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
♦ இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
♦ தாம் தயாரிக்க உள்ள படத்தில் சிம்ரன் தனி நாயகியாக நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
♦ தனது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறாராம் நயன்தாரா. இது நயன்தாராவின் சொந்தத் தயாரிப்பாக இருக்கும் எனத் தகவல்.


