திவ்யன்ஷா கௌஷிக் என்ற பெயரை உச்சரித்தாலே போதும், இளையர்களுக்கு உற்சாகமாகிவிடுகிறது. மைக்கேல், டக்கர் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான இளம் நாயகி திவ்யன்ஷாவுக்கு சிறு வயது முதல் திரைத்துறையில் கால்பதிக்க வேண்டும் என்பதுதான் கனவு.
துருதுரு நடிப்பு, வசீகரிக்கும் அழகு, வாளிப்பான உடற்கட்டு என இளையர்கள் அணுஅணுவாய் ரசிக்கும் வகையில் வலம் வருகிறார் திவ்யன்ஷா.
இவரது தாயார் திரைத்துறையில் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றியவர். பெற்றோர் சிறு வயதிலேயே பிரிந்துவிட்ட நிலையில், தாயாரின் பராமரிப்பிலும் அன்பிலும் வளர்ந்து ஆளாகியுள்ளார் இந்த இளம் நாயகி.
“அப்பா எனக்கு விவரம் தெரியும் முன்பே இறந்துவிட்டார். அம்மாதான் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் என்னை வளர்த்தார். எங்கேயும் எப்போதும் துணிச்சலாக இருக்க வேண்டும் என்ற அறிவுரையைத்தான் சிறு வயது முதல் இப்போது வரை அம்மா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
“அந்த அறிவுரையைக் கேட்டு வளர்ந்ததால் உண்மையாகவே நான் துணிச்சலான பெண்ணாக உருவாகி உள்ளேன். எனக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் செய்வேன். மனம் சொல்வதைக் கேட்டு செயல்படும் பெண் நான்,” என்கிறார் திவ்யன்ஷா.
சிறு வயதில் பள்ளி விடுமுறை நாள்கள் என்றால் தன் அம்மாவுடன் படப்பிடிப்புக்குக் கிளம்பிவிடுவாராம். படப்பிடிப்பு, நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என சினிமா சார்ந்த நடவடிக்கைகளை பார்த்து வளர்ந்ததால் இயல்பாகவே அத்துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்.
“எனவேதான் திரைத்துறை சார்ந்த படிப்பு, பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்தேன். முன்னதாக ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளேன்.
“நடிப்புப் பயிற்சியின்போது எப்படி முகபாவங்களை மாற்ற வேண்டும் கேமரா முன்பு எப்படி நிற்க வேண்டும், வசனங்களைப் பேசுவது எப்படி என்று பல நுணுக்கங்களை அறிந்துகொண்ட பிறகே திரையுலகில் கால்பதித்தேன். நான் நன்றாக நடித்தேனா, பயிற்சி பலன் அளித்ததா என்பதையெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால் திரைத்துறைதான் எனக்கான உலகம் என்ற முடிவை மட்டும் தெளிவான மனநிலையில் எடுத்தேன்,” என்கிறார் திவ்யன்ஷா.
தொடர்புடைய செய்திகள்
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கட்டாயப் பழக்கமாக வைத்துள்ளார். மேலும் நாள் முழுவதும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறிய நடன அசைவுகளில் கவனம் செலுத்துகிறார் திவ்யன்ஷா.
எப்போதுமே வீட்டுச் சமையல்தான் இவரது முதல் தேர்வு. ஓய்வு கிடைத்தால் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பாராம்.
“நான் இதுவரை ஏற்று நடித்துள்ள பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணிச்சலான பெண்ணாக நடித்திருப்பேன். சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளேன். உண்மையில் இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடிக்கும் கதாநாயகி நான். விருந்து, கேளிக்கைகளில் நாட்டம் கிடையாது. ஒருவகையில் வீட்டுப் பறவை எனலாம்.
“திரையுலகுக்கு வந்த பின்னர் என்னிடம் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வெற்றி, தோல்விகளை இயல்பாக ஏற்றுக்கொள்கிறேன். எதையும் தலைக்குள் ஏற்றிக் கொள்ளமாட்டேன். இது அம்மாவின் அறிவுரை,” என்கிறார் ‘அம்மா பொண்ணு’ திவ்யன்ஷா.
துணிச்சலான, புரட்சிகரமான இளம்பெண் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பு வதாகச் சொல்பவர், கீர்த்தி சுரேஷ் போன்று வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்க விரும்புகிறாராம்.
“அதுபோன்ற படங்கள் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். எனவேதான் நடிக்க விரும்புகிறேன். மேலும், இன்றைய தேதியில் ரசிகர்கள் ஒரே மாதிரியான படங்களைப் பார்க்க விரும்புவதில்லை.
“அதேபோல் நாமும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் ரசிகர்கள் மறந்துவிடுவார்,” என்று சொல்லும் திவ்யன்ஷாவுக்கு இட்லிதான் மிகவும் பிடித்தமான சிற்றுண்டியாம். அதேபோல் சாம்பார் பிரியையும்கூட.
தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிக்க ஆசைப்படுபவர், தனி நாயகியாக நடிப்பதற்கு அவசரப்படவில்லை என்கிறார்.
இப்போதுதான் நல்ல கதாபாத்திரங்கள் தேடி வருகின்றன. எனக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. என் பெயர் திரையுலகில் நிலைத்திருக்கும்படி ஏதாவது செய்வேன்,” என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் திவ்யன்ஷா.

