எதற்கும் ஓர் எல்லை உண்டு

எதற்கும் ஓர் எல்லை உண்டு

3 mins read
edd4c975-db26-4d21-98b5-f84de0754c32
வாணி போஜன் - படம்: ஊடகம்

சமூக ஊடகங்களை சிலர் தவறாகப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார் நடிகை வாணி போஜன்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்திருப்பதாக உற்சாகத்துடன் குறிப்பிடுகிறார்.

கோடம்பாக்கத்தின் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இவர் சத்தமின்றி இடம்பிடித்து ரொம்ப காலம் ஆகிறது. தனக்கான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார் வாணி.

அண்மைய பேட்டி ஒன்றில், ‘சிலர் வயதான பெண்களைக் கூடத் தப்பாகத்தான் பார்க்கிறார்கள்’ என்று கோபமாகக் குறிப்பிட்டிருந்தார் வாணி.

“நான் அவ்வாறு கூறியது உண்மைதான். பொது இடங்களில் இதுபோன்று அசிங்கமாக நடந்துகொள்பவர்களைப் பார்த்திருக்கிறேன். சமூக ஊடகங்கள் குறித்துப் பேசியபோது, இதுபோன்ற கேவலங்கள் குறித்தும் குறிப்பிட வேண்டிய கட்டாயம் எழுந்தது.

“இன்றைய உலகில் சமூக ஊடகங்கள் இன்றி எந்தவோர் இயக்கமும் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். சமூக ஊடகங்களில் பலர் நமது திறமையை மதித்து, பாராட்டி கருத்துகளைப் பதிவிடுகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.

“அதேசமயம் சிலர் எல்லை மீறிப்போய்விடுகிறார்கள். அவர்களுடைய வீட்டிலும் அம்மா, தங்கைகள், அக்காள்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள் சேலை கட்டுவதில்லையா, நவீன உடைகளை அணிவதில்லையா? அவர்களிடம் சென்று, அரைகுறை கவர்ச்சி வேண்டாம்... முழுக் கவர்ச்சியையும் வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்வார்களா?

“எதற்கும் ஓர் எல்லை உண்டு. அதை மதிக்கவில்லை எனில் பிறகு சிக்கல்தான்,” என்று படபடவென கோபத்தில் கொந்தளிக்கிறார் வாணி போஜன்.

நடிகர் பரத்துடன் ‘மிரள்’, ‘லவ்’ என்று அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைந்து நடித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, சிலர் சமூக ஊடகங்களில் வில்லங்கமாகப் பதிவிட்டிருந்தனர். இதுதான் வாணியின் கோபத்துக்கு முதல் காரணம்.

“சிலர் மோசமான கருத்துகளை பதிவிட்டிருந்ததை நானும் கவனித்தேன். ஆனால் எதிர்வினையாற்றவில்லை. நான் எதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டும்?

“அதேசமயம் என்னைப் பற்றி மட்டமாக எழுதினால் சிலருக்குக் காசு கிடைக்கிறது எனில் எனக்கும் மகிழ்ச்சிதான். கீழ்த்தர புத்தி உள்ளவர்களை திருத்துவது என் வேலையல்ல,” என்கிறார் வாணி.

தற்போது ஜீவா சங்கர் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்கிறார் வாணி. மேலும், விதார்த்துடன் இணைந்து நடித்துள்ள இணையத்தொடரும் விரைவில் வெளியாக உள்ளது.

‘செங்களம்’ இணையத்தொடரில் வாணியின் உடல்மொழி தமிழகப் பெண் அரசியல்வாதியை நினைவூட்டும் வகையில் உள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் தாம் யாரையும் பின்பற்றி அவ்வாறு நடிக்கவில்லை என்பது வாணியின் விளக்கமாக உள்ளது.

“சத்தியமாக நான் யாரையும் உற்றுக் கவனித்து அதை என் நடிப்பில் வெளிப்படுத்தவில்லை. பள்ளி, கல்லூரி நாள்களிலேயே ஆண், பெண் என்கிற பேதம் இல்லாமல் அரசியல்வாதிகளைப் பார்த்து வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவள் நான்.

“அப்படிப் பார்த்து உள்வாங்கியதைத்தான் ’செங்களம்’ தொடரின் சூர்யகலா கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தினேன். அதற்கு இத்தனை பாராட்டுகள் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை,” என்கிறார் வாணி.

அண்மையில் தனது கடப்பிதழைப் புதுப்பிக்க சென்னையில் உள்ள கடப்பிதழ் அலுவலகத்துக்குச் சென்றிருந்தாராம். ரசிகர்கள் தம்மை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதால் முகக்கவசம் அணிந்து சென்றுள்ளார்.

“அப்படியிருந்தும் மூதாட்டி ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். என் அருகே வந்து நான் நடித்த ஒரு தொலைக்காட்சித் தொடரின் தலைப்பைக் குறிப்பிட்டு, எனது நடிப்பு அருமை எனப் பாராட்டினார்.

“முகக்கவசம் அணிந்தால் கண்டுபிடிக்க முடியாதா? உன் கண்களே உன்னைக் காட்டிக்கொடுத்துவிடும் என்றார் அம்மூதாட்டி. இதுவரை எனக்குக் கிடைத்த பாராட்டுகளில் இது மறக்க இயலாத ஒன்று.

“இதுபோன்று என்னிடம் அன்பு காட்டும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை எல்லாம் மகி்ழ்விக்கும் வகையில் நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பேன்,” என்கிறார் வாணி.

குறிப்புச் சொற்கள்