‘ஆக்ஷன் கிங்’ என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
இவரது மகளான ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியான ‘சொல்லி விடவா’ படத்திலும் நடித்து இருந்தார்.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யாவுக்கும் நகைச்சுவை, குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றபோது நட்பு ஏற்பட்டு பிறகு காதல் வயப்பட்டு உள்ளனர். தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட உமாபதியின் நல்ல பழக்கங்களும் நடவடிக்கைகளும் அர்ஜுனுக்குப் பிடித்துப்போனதால் திருமணத்திற்கு அவர் பச்சைக்கொடி காட்டியதாகக் கூறப்படுகிறது.
திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.
உமாபதி ‘மணியார் குடும்பம்’, ‘தண்ணி வண்டி’, ‘திருமணம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார். ‘ராஜாகிளி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
தம்பி ராமையா கூறும்போது, “என் மகன் உமாபதிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் பார்க்கத் தொடங்கியபோது, ஐஸ்வர்யாவை காதலிப்பதாகத் தெரிவித்தார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.
“இதையடுத்து எனது மனைவியும் நானும் அர்ஜுனை சந்தித்துப் பேசினோம். அவரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். “நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடத்த இருக்கிறோம்.
“உமாபதி எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் காட்டும் அக்கறை அர்ஜுனுக்குப் பிடித்துள்ளது. எங்கள் மருமகளாக ஐஸ்வர்யாவை வரவேற்க நாங்கள் மகிழ்ச்சியோடு காத்து இருக்கிறோம்,’‘ என்றார்.