கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்த நடிகை அசின் தம் கணவரைப் பிரியவிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவலான செய்தியால் ரசிகர்கள் பரபரத்தனர்.
இந்நிலையில், இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றின்மூலம் அதற்கு விளக்கமளித்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அசின்.
“நானும் என் கணவரும் எதிரெதிரே அமர்ந்து, காலை உணவைச் சுவைத்தபடி, கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்துக்கொண்டிருக்கிறோம். கற்பனையான, அடிப்படை ஆதாரமற்ற சில செய்திகளைக் காண நேர்ந்தது. அது, எங்கள் இருவரின் குடும்பத்தினருடனும் வீட்டில் அமர்ந்து, எங்கள் திருமணத்திற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோதும் நாங்கள் பிரிந்துவிட்டதாக கிளம்பிய வதந்தியை நினைவூட்டுவதாக உள்ளது. உண்மையாகவா? வேறு வேலை ஏதேனும் இருந்தால் பாருங்கள். (அற்புதமான இந்த விடுமுறையில் ஐந்து நிமிடங்களை வீணடித்தது வருத்தமளிக்கிறது). உங்களது நாள் சிறப்பானதாக அமையட்டும்,” என்று அப்பதிவில் அசின் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலதிபரான ராகுல் சர்மாவிற்கும் நடிகை அசினுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு அரின் என்றொரு மகள் இருக்கிறார்.
‘மைக்ரோமேக்ஸ்’ இணை நிறுவனரான ராகுல் சர்மாவை அசினுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் நடிகர் அக்ஷய் குமார். அவர்கள் இருவருக்கும் நல்ல பொருத்தம் இருப்பதாக அக்ஷய் நினைத்தார். சில ஆண்டுகளில் அது உண்மையாகிவிட்டது.
ராகுல்-அசின் இணையர் பிரியவிருப்பதாகச் செய்தி வெளியானது இதுவே முதன்முறை. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்துள்ள அசின், திருமணத்திற்குப் பிறகு தமது திரையுலகப் பயணத்திற்கு விடைகொடுத்துவிட்டார்.


