விவாகரத்து சர்ச்சைக்கு அசின் முற்றுப்புள்ளி

விவாகரத்து சர்ச்சைக்கு அசின் முற்றுப்புள்ளி

3 mins read
81eb65fe-c832-43f3-b6e2-108cf7fda574
நடிகை அசின் தன் கணவர் ராகுல் சர்மாவுடன். - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாளப்பட உலகிலும் பிரபல நடிகையாகப் பேசப்பட்டவர்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர், தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்வதாகவும் விவாகரத்து செய்து விட்டதாகவும் தீயாகப் பரவி வரும் வதந்திகளுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்த நடிகை அசின் தம் கணவரைப் பிரியவிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தியால் ரசிகர்கள் பரபரத்தனர்.

இந்நிலையில், இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றின்மூலம் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் அசின்.

“நானும் என் கணவரும் எதிரெதிரே அமர்ந்து காலை உணவைச் சுவைத்தபடி, கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருக்கும் சூழலில், கற்பனையான, அடிப்படை ஆதாரமற்ற சில செய்திகளைக் காண நேர்ந்தது.

“அது, எங்கள் இருவரின் குடும்பத்தினருடனும் வீட்டில் அமர்ந்து, எங்கள் திருமணத்திற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோதும் நாங்கள் பிரிந்துவிட்டதாக கிளம்பிய வதந்தியை நினைவூட்டுவதாக உள்ளது.

“உண்மையாகவே வேறு வேலை ஏதேனும் இருந்தால் பாருங்கள். (அற்புதமான இந்த விடுமுறையில் ஐந்து நிமிடங்களை வீணடித்தது வருத்தமளிக்கிறது). உங்களது நாள் சிறப்பானதாக அமையட்டும்,” என்று அப்பதிவில் அசின் குறிப்பிட்டுள்ளார்.

‘கஜினி’ படத்தில் கைப்பேசி நிறு வனத்தின் உரிமையாளரான சஞ்சய் ராமசாமியைத் தெரியாமல் காதலித்தது போலவே நிஜத்திலும் ‘மைக்ரோமேக்ஸ்’ நிறுவனத் தொழிலதிபரான ராகுல் சர்மாவைக் காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 2017ஆம் ஆண்டில் பிறந்த அரின் என்றொரு மகள் இருக்கிறார்.

ராகுல் சர்மாவை அசினுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் நடிகர் அக்‌ஷய் குமார். அவர்கள் இருவருக்கும் நல்ல பொருத்தம் இருப்பதாக அக்‌ஷய் நினைத்தார். சில ஆண்டுகளில் அது உண்மையாகிவிட்டது.

ராகுல்-அசின் இணையர் பிரியவிருப்பதாகச் செய்தி வெளியானது இதுவே முதன்முறை. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்துள்ள அசின், திருமணத்திற்குப் பிறகு தமது திரையுலகப் பயணத்திற்கு விடைகொடுத்துவிட்டார்.

47 வயதான அசினின் கணவர் ராகுல் சர்மா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்.

2017ஆம் ஆண்டில் ‘போர்ப்ஸ்’ சஞ்சிகை ராகுல் சர்மாவின் நிகர சொத்து மதிப்பு ஏறக்குறைய 1,300 கோடி ரூபாய் என அறிவித்து இருந்தது.

ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும் அவர் கேட்காததால் விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து இருவரும் எந்த தகவலும் வெளியிடாமல் இருந்து வந்த சூழலில், அசின் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஏற்கெனவே பகிர்ந்திருந்த தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார்.

இதை வைத்தே அவர் தன் கணவரை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற பேச்சு அடிபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்தி நடிகை அசின் பார்வைக்குச் சென்ற நிலையில், தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வேறு ஏதாவது அர்த்தமுள்ள வகையில் கருத்துகளைப் பதிவிடுங்கள் என நடிகை அசின் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்