திரையுலகில் தனக்கு உள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் சில நடிகைகள் செயல்படுவதாகச் சாடி உள்ளார் நயன்தாரா.
“எத்தகைய போராட்டங்களைச் சந்தித்து, இன்று உள்ள நிலையை நான் எட்டிப் பிடித்துள்ளேன் என்பது எனது ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் நன்கு தெரியும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் அண்மையில் அளித்த பேட்டியும் அதில் அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டும்தான் நயன்தாராவின் புலம்பலுக்கும் கோபத்துக்கும் காரணம்.
மம்தா அப்படியென்ன சொல்லிவிட்டார்?
சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான படம் குசேலன். இப்படத்தை தெலுங்கில் ‘கதாநாயகுடு’ என்ற பெயரில் வெளியிட்டனர்.
இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் மம்தா மோகன்தாசும் நடித்திருந்தார். மேலும் சில வசனக் காட்சிகளிலும் அவரை நடிக்க வைத்தனராம். இது நயன்தாராவுக்கு தெரியவந்தபோது அவர் கோபமாகிவிட்டதாகச் சொல்கிறார் மம்தா.
“இதனால் நான் நடித்த பெரும்பாலான காட்சிகளைப் படத்தில் இருந்து நீக்கிவிட்டனர்,” என்று அண்மைய பேட்டியில் மம்தா வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து சமூக ஊடகங்களில் நயன்தாராவை ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர் லேடி ‘சூப்பர் ஸ்டார்’ அல்ல, ‘சூப்பர் வில்லன்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுப்படம் ஒன்றில் உண்மையாகவே எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து நயன்தாரா யோசித்து வருவதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.


