சத்தமின்றி சில நல்ல செயல்களைச் செய்து வருகிறார் இளம் நாயகி சித்தி இட்னானி.
ஏற்கெனவே முதியோர், ஆதரவற்றோருக்கு உதவி செய்யும் அவர், அண்மையில் மனநலம் குன்றிய பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான பொருள்களை வழங்கி உள்ளார்.
மேலும், அக்குழந்தைகளுடன் பல மணி நேரத்தைச் செலவிட்டு, அவர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் சித்தி இட்னானி. அடுத்து, ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்துள்ளார்.
“ஒருவருக்கு நாம் அளிக்கக்கூடிய ஆகச்சிறந்த பரிசு என்றால், அது அவர்களுக்காக நம்முடைய நேரத்தை ஒதுக்குவதுதான். குழந்தைகளுடன் சில மணி நேரங்களைச் செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பற்றது,” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் சித்தி.
இதையடுத்து அவரது நல்ல மனதையும் அறிவுரையையும் பாராட்டுவதாக ரசிகர்கள் பலர் பின்னூட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில், குறுகிய காலத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் கிராமத்து இளம்பெண்ணாக நடித்திருப்பதை பல்வேறு தரப்பினர் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“அசுரன்’, ‘ரங்கஸ்தலம்’ மாதிரி நிறைய கிராமம் சார்ந்த படங்களைப் பார்த்துள்ளேன். அவற்றில் நடித்துள்ள கதாநாயகிகளின் உடல்மொழி, நடிப்பு, வசன உச்சரிப்பு என்று அனைத்தையும் கவனித்தேன். குறிப்பாக இயக்குநர் முத்தையா இயக்கிய ‘கொம்பன்’, ‘விருமன்’ படங்களையும் பார்த்தேன்.
“முதன்முறையாக இந்தப் படத்துக்காகத்தான் பாவாடை தாவணி அணிந்தேன். இயக்குநர் சசியின் ‘நூறு கோடி வானவில்’ படத்தில் அதேமாதிரி உடைகளை அணிந்து நடித்திருந்தாலும் அதில் என்னுடைய தோற்றம் வேறுவிதமாக இருக்கும்,” என்கிறார் சித்தி இட்னானி.
எனினும் முழுக்க முழுக்க கிராமத்துப் பெண்ணாக நடித்தது முற்றிலும் புது அனுபவமாக இருந்தது என்றும் மும்பையில் நவநாகரிகச் சூழலில் வளர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை நடிக்க வராமல் இருந்திருந்தால் கிராமத்து வாழ்க்கையை அனுபவித்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ள சித்தி, ‘காதர் பாட்சா’ படத்துக்காக தமது வசதியான வாழ்க்கையை விட்டுக் கொடுத்து நடித்ததாகச் சொல்கிறார்.
“சென்னைத் தமிழிலிருந்து கோவில்பட்டி தமிழ் உச்சரிப்பு சற்று வித்தியாசமாக இருக்கும். எனவே பின்னணிக் குரல் பதிவின்போது என்னால் எந்தவிதமான குழப்பங்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் வசனங்களை அதிக கவனத்துடன் பேசி நடித்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இதுவரை எட்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். என்னுடைய பதினாறு வயதில் முதல் படம் வெளிவந்தது.
“அந்த சமயத்தில் சினிமாவைப் பற்றி அதிகம் தெரியாது. விளையாட்டுத்தனமாக இருந்துவிட்டேன். ஒவ்வொரு படமாக நடிக்கும்போதுதான் சினிமா உலகம் குறித்து புரிகிறது,” என்கிறார் சித்தி இட்னானி.
எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியின் அடையாளம், கலாசாரத்துக்கு மதிப்பு தரவேண்டும் என்று குறிப்பிடுபவர், மொழிகளைக் கற்றுக்கொள்வது அவசியம் என்கிறார். மேலும், மொழி தெரிந்தால்தான் வசனங்களைப் புரிந்துகொண்டு நடிக்க முடியும் என்று சொல்லும் சித்தி இட்னானி, தமிழில் ஓரளவு பிழையின்றிப் பேசக் கற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
“என் வாழ்வில் அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடிய சில அம்சங்கள் உள்ளன. நடிகையாக கேமரா முன் நிற்பது, திரையுலகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, மக்களுடன் கலந்துரையாடுவது, நடனம், விதவிதமான உணவு வகைகளைச் சாப்பிடுவது ஆகியவை வாழ்நாள் இறுதிவரை நீடிக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்கிறார் சித்தி இட்னானி.

