எம்.ஜி.ஆர். ரசிகராக கார்த்தி
நடிகர் கார்த்தி தற்போது ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தில் அவரது ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இதில் கார்த்தி தீவிர எம்.ஜி.ஆர். ரசிகராக நடிக்கிறாராம். அதனால் இந்தப் படத்திற்கு ‘ரத்தத்தின் ரத்தமே’ அல்லது ‘வா வாத்தியாரே’ போன்ற தலைப்புகளை வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்.
ரஜினியுடன் மோதும் அர்ஜூன்
‘இரும்புத்திரை’ படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தற்போது விஜயின் ‘லியோ’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இதையடுத்து, ரஜினி நடிக்கும் 170வது படத்திலும் வில்லனாக நடிக்கப் போகிறார்.
இதன் காரணமாக, எஸ்.ஜே.சூர்யா, பகத் பாசிலை அணுகிய இயக்குநர்கள் எல்லாம் தற்போது அர்ஜுன் பக்கம் திரும்பி உள்ளனர். ‘எந்த மாதிரியான வில்லன் வேடம் என்றாலும், நடிப்பதற்கு தயார்’ என கோலிவுட்டில் தகவல் வெளியிட்டுள்ளார்.
ராணுவ வீரராக சிவகார்த்திகேயன்
* பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தில் அவருக்கு ஜோடியாக வேதிகா நடிக்கிறார். இந்தப் படத்தை எஸ்.ஜே.சினு என்ற மலையாள இயக்குநர் இயக்குகிறார்.
* தன் 21வது படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது.
நிறைவை நெருங்கும் ‘தங்கலான்’
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் விக்ரம் 30 வயது இளைஞர், வயதான முதியவர் என இரண்டு தோற்றங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி ஆகியோர் இதில் இணைந்து நடிக்கிறார்கள்.
இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் ஒரு வாரம் நடைபெறவுள்ளதாகவும் அதனுடன் ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவடைவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

