பத்து வெற்றிப் படங்களை தயாரித்து பல கோடிகளை சம்பாதித்திருப்பார்கள். ஆனால் ஒரே ஒரு தோல்விப்படம் தயாரித்ததால் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள். திரையுலகில் தயாரிப்பாளர்களின் நிலை இதுதான்.
எனினும் திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற பெரும் ஆவலில் பல கோடி ரூபாயை முதலீடு செய்ய முன்வருவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
ஆண்டுதோறும் தயாரிக்கப் படும் படங்களின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி. அந்த வகையில் நடப்பாண்டில் முதல் ஆறு மாத காலத்தில் தமிழ்த் திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியீடு கண்டுள்ளன.
அவற்றுள் முன்னணி நாயகர்கள் நடித்த படங்களின் எண்ணிக்கையானது இருபதைக்கூட தாண்டாது. அஜித், விஜய், தனுஷ், சசிகுமார், பிரபுதேவா, சிம்பு, விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், அருள்நிதி, விஜய் ஆண்டணி, விமல், அரவிந்த்சாமி, ஜெய், ஆர்யா என ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான 31 நடிகர்களின் படங்கள் வெளியீடு கண்டுள்ளன.
“அவற்றிலும்கூட, ‘துணிவு’, ‘வாரிசு’, ‘டாடா’, ‘வாத்தி’, ‘அயோத்தி’, ‘பத்து தல’, ‘பொன்னியின் செல்வன்’, ‘போர் தொழில்’ என எட்டே எட்டு படங்கள்தான் விமர்சன, வசூல் ரீதியில் வரவேற்பைப் பெற்ற படங்கள். மற்ற படங்களின் வசூல் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. ஒருசில படங்கள் வேண்டுமானால் சில கோடிகளை லாபமாகத் தந்திருக்கலாம். மற்றபடி இப்போதும்கூட தயாரிப்பாளர்களின் நிலை கவலை தரும் அளவிலேயே உள்ளது,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
நூறு கோடி, இருநூறு கோடி வசூல் என்று வெளியே பெருமையுடன் சொல்லிக் கொள்பவர்கள், உண்மையில் கடும் நெருக்கடியில்தான் இருப்பார்கள். ஏனெனில் இந்தாண்டு இதுவரை மிகப்பெரும் லாபத்தை கொடுத்த படம் என்று எதையுமே குறைப்பிட இயலாது என்று திரைச் செய்தியாளர்களும் கூறுகின்றனர்.
“100 கோடி வசூல் என ‘வாத்தி’ படத்தையும் 200 கோடி வசூல் என ‘துணிவு’ படத்தையும் 300 கோடி வசூல் என ‘வாரிசு’, ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகிய படங்களையும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வசூல் கணக்கு பரவியது. இதில் எது உண்மை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும்,” என்று தமிழக ஊடகம் வெளியிட்ட அலசல் கட்டுரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளையில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பல படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மனநிறைவு தரும் வகையில் லாபத்தைப் பெற்றுத் தந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பட்டியலில் ‘டாடா’, ‘அயோத்தி’, ‘விடுதலை பாகம் 1’, ‘குட்நைட்’, ‘போர் தொழில்’ ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் எந்தப் படத்திலும் முன்னணி நாயகர்கள் நடிக்கவில்லை. அதேவேளையில் தரமான படைப்புகள் என்றால் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்பதற்கான சாட்சியாக இந்தப் படங்கள் உள்ளன.
சரி, கதாநாயகிகளின் நிலவரம் குறித்து பார்ப்போம்.
நாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்தகைய படங்களாக தேர்வு செய்து நடிப்பவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முதலிடம் கொடுக்கலாம்.
இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘சொப்பன சுந்தரி’, ‘ஃபர்ஹானா’ என மூன்று படங்கள் வெளிவந்துள்ளன. முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வேறு எந்த ஒரு நடிகை நடிப்பிலும் கடந்த ஆறு மாத காலத்தில் மூன்று படங்கள் வெளியாகவில்லை.
எண்ணிக்கை மகிழ்ச்சி அளித்தாலும், இம்மூன்று படங்களுமே பெரிதாகப் பேசப்படவில்லை. ‘ரன் பேபி ரன்’, ‘தீராக் காதல்’ ஆகிய படங்களையும் சேர்த்தால், கடந்த ஆறு மாத காலங்களில் அதிக தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை என்ற பெருமையைப் பெறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்தப் பட்டியலில் வரலட்சுமி சரத்குமாருக்குத்தான் இரண்டாம் இடம் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.
‘வி 3’, ‘கன்னித் தீவு’, ‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என பல படங்களில் வரிசையாக நடித்து வருகிறார் வரலட்சுமி.
நகைச்சுவை நடிகர்களில் சந்தேகமே இல்லாமல் யோகி பாபுவுக்குத்தான் முதலிடம். ‘பொம்மை நாயகி’, ‘யானை முகத்தான்’, ‘காசேதான் கடவுளடா’ ஆகிய படங்களுடன் ‘வாரிசு’, ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘இரும்பன்’, ‘கோஸ்டி’ என ஓய்வின்றி தொடர்ந்து நடித்து வருகிறார் யோகி.
நகைச்சுவை நடிகராக இருந்து ‘விடுதலை’ படம் மூலம் கதாநாயகனாக உயர்ந்த சூரி, ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார்.
சூரி மேலும் இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.