தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சஞ்சிதா: கதாநாயகியாக நீடிப்பது எளிதல்ல

3 mins read
f396335a-4f8c-4094-93ef-cff503ac80b4
சஞ்சிதா ஷெட்டி - படம்: ஊடகம்

“நான் நடிக்க வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அறிமுகமான நாள் முதல் இன்றுவரை எனக்கென்று தனி இடத்தை அளித்திருக்கிறது தமிழ்த் திரையுலகம். அதற்காக ரசிகர்களுக்கு நன்றி,” என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.

‘தில்லாலங்கடி’, ‘சூது கவ்வும்’, ‘பீட்சா 2’ உள்ளிட்ட படங்களில் சஞ்சிதா ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்களை ரசிகர்கள் என்றும் நினைவில் வைத்திருப்பர்.

தற்போது ‘அழகிய கண்ணே’ என்ற படத்தில் அறவே ஒப்பனையின்றி நடித்துள்ளார். கிராமத்து அழகியாக இந்தப் படத்தில் தனி முத்திரை பதித்துள்ளதாகச் சொல்கிறார்.

“கடந்த பத்து ஆண்டுகளில் பதினைந்து புது இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளேன். அதனால் ஒவ்வொரு படமும் எனக்கான நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளன. ஒவ்வொரு பட அனுபவமும் எனக்கான நல்ல பயிற்சி என்பேன்.

“அவற்றின் மூலம் நல்ல நடிகை எனப் பெயர் வாங்க முடிந்தது. அதன் காரணமாகத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் நான் நடித்த மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ளன.

“மோகன்ராஜா, நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு, சமுத்திரக்கனி எனப் பலதரப்பட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, சினிமாவின் பல்வேறு அம்சங்களை, அழகியலைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அடுத்து இயக்குநர் அமீருடன் பணியாற்றுகிறேன். அதுவும் நல்ல அனுபவங்களைக் கொடுக்கும் என நம்புகிறேன்,” என்கிறார் சஞ்சிதா.

‘அழகிய கண்ணே’ படத்தில் கிராமத்து இளம்பெண்ணாக நடித்துள்ள இவர், அக்கதாபாத்திரம் தமது இயல்புடன் வெகுவாகப் பொருந்தி உள்ளதாகச் சொல்கிறார்.

படப்பிடிப்பு இல்லாத நாள்களில் வீட்டில் இப்படித்தான் இருப்பாராம்.

தொடர்புடைய செய்திகள்

“வீட்டில் இருக்கும் சமயங்களில் சல்வார், சேலை போன்ற உடைகளை மட்டுமே பயன்படுத்துவேன். ஒப்பனையின்றி் இருக்கும்போது இயல்பான நடிப்பை வழங்க முடிகிறது.

“இந்தப் படத்தில் நான் நானாகவே நடித்துள்ளேன். படம் முழுவதும் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். ஆறு மாதக் கைக் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு அழ வேண்டும் சிரிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியபோது எளிதான வேலையாகத் தோன்றியது. ஆனால் படப்பிடிப்புக்கு முன் கைக்குழந்தையைத் தூக்குவதற்கே தனிப்பயிற்சி தேவைப்பட்டது,” என்கிறார் சஞ்சிதா.

‘அழகிய கண்ணே’ படத்தின் கதையும் கதாபாத்திரமும் தனது மனதுக்கு நெருக்கமானதாக இருந்தன என்றும் அதன் காரணமாகத் தயக்கமின்றி நடிக்க ஒப்புக்கொள்ள நேரிட்டது என்றும் சொல்கிறார்.

திரையுலகில் கதாநாயகியாக இருப்பது மிக எளிதான ஒன்று என்று நினைத்துவிடக்கூடாது என்பதே இளம் நடிகைகளுக்கு சஞ்சிதா கூறும் முதல் அறிவுரை.

“கதாநாயகி வாழ்க்கை என்பது பல்வேறு சவால்களைக் கொண்டது. அடிக்கடி நம்மை நாமே நிரூபிக்க வேண்டியிருக்கும். சரியான முடிவுகளை எடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“திரையுலகில் நமக்கான இடத்தைப் பிடிப்பதே பெரிய வேலை எனில், அதைத் தக்க வைக்கவும் போராட வேண்டியிருக்கும். இந்தச் சவாலில் வெற்றிபெற்றால்தான் பல ஆண்டுகள் திரையுலகில் நீடித்திருக்க இயலும். எனவே நடிகையாக இருப்பது எளிதல்ல, குறிப்பாக கதாநாயகியாக நீடிப்பது அறவே எளிதல்ல,” என்கிறார் சஞ்சிதா.

தன்னைப் பற்றிய நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள அறவே தயங்கியதில்லை என்று குறிப்பிடுபவர், எதிர்மறை விமர்சனங்களைக் கண்டுகொள்வதில்லை என்கிறார். தவிர வீண் சர்ச்சைகளில் சிக்க விரும்பவில்லை என்றும் தெளிவாகச் சொல்கிறார்.

“பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த திரையுலகம் முற்றிலும் மாறுபட்டது. இப்போதெல்லாம் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கிறது. புதுப்புது இயக்குநர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள்.

“இப்போது அனைவருக்கும் உரிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. மொழி சார்ந்த, மாநிலம் சார்ந்த படைப்புகள் என்ற நிலை மாறி, இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ப படங்கள் வெளிவருகின்றன. இளம் கலைஞர்களை மூத்தவர்கள் பாராட்டுகிறார்கள். இவையெல்லாம் நாம் கண்கூடாகப் பார்க்கும் மாற்றங்கள்,” என்கிறார் சஞ்சிதா.

குறிப்புச் சொற்கள்