பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இப்படம், கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப் குறித்த கதை என்று பா. ரஞ்சித் கூறியிருந்தார். இதன் காரணமாகவே மக்களிடையே இந்தப் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள இவிபி திரைப்பட நகரில் ‘தங்கலான்’ படப்பிடிப்பின் ஒத்திகை நடந்தது. அப்போது விக்ரமின் விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் ஓய்வெடுத்துத் திரும்பும்வரை, படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. விக்ரம் குணமடைந்ததும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
இந்தப் படத்தில் விக்ரம் 30 வயது இளைஞர், வயதான முதியவர் என இரண்டு தோற்றங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் ஆகியோர் இதில் இணைந்து நடிக்கிறார்கள்.
இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் ஒரு வாரம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவடையும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

