அண்மையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் குறித்து புகார்கள் எழுப்பிய தயாரிப்பாளர் சங்கம் அடுத்து முன்னணி நடிகைகள் குறித்தும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளது.
அமலா பால், லட்சுமி ராய் உள்ளிட்ட கதாநாயகிகளால் தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
எந்தெந்த கதாநாயகிகள், எத்தகைய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று அவர்கள் விரிவாக பட்டியலிட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அண்மையில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்க நிர்வாகிகளின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது முன்னணி கதாநாயகிகள் குறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பகிரங்கமாக புகார்கள் தெரிவித்தனர்.
முன்னணி கதாநாயகிகள் சிலர் படப்பிடிப்புக்கு வரும்போது பாதுகாவலர்கள் என்ற பெயரில் குறைந்தது பத்து பேரை நியமிப்பதாகவும் அந்தப் பத்து பேருக்குமான ஊதியம் தங்கள் தலையில் சுமத்தப்படுவதாகவும் தயாரிப்பாளர்கள் கூறினர்.
வெளியூர் படப்பிடிப்பு என்றால் அந்தப் பாதுகாவலர்கள் மட்டுமல்லாமல், முன்னணி நாயகிகளின் ஒப்பனையாளர், ஆடை வடிவமைப்பாளர், மேலாளர் உள்ளிட்டோர் தங்குவிடுதிகளில் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது என்பது தயாரிப்பாளர்களின் மற்றொரு புகாராகும்.
இனிமேல் நடிகைகளின் பாதுகாவலர்களுக்கு தயாரிப்பாளர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் ஊதியம் வழங்க முடியாது என்றும் நடிகைகளே பாதுகாவலர்களுக்கு உரிய சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து புதுப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் முன்னணி கதாநாயகிகள் சிலர் பங்கேற்பதில்லை என்பதை சில தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
சில நாயகிகள் ஒரு படத்தில் நடிக்க சம்பளம் பெறுவது தவிர, இதுபோன்ற விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு என தனியாக சில லட்சங்களைப் பெறுவதாக பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஒரு படத்துக்கான நடிப்புத் தேர்வு தொடங்கி படம் வெளியீடு காணும் வரை உள்ள காலகட்டத்துக்குதான் ஊதியம் பேசப்படுகிறது, இதுகுறித்த ஒப்பந்தத்தில் அனைத்து விவரங்களும் இடம்பெறுகின்றன என்று தயாரிப்பாளர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
“ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் விளம்பர நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கும்போது, அந்தப் படைப்பின் மீதான நம்பகத்தன்மை ரசிகர்கள் மத்தியில் குறைந்து போகிறது. அதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
“எனவே, இனிவரும் காலங்களில் நடிகைகள், குறிப்பாக கதாநாயகிகள் அனைவரும் இசை வெளியீட்டு விழா, முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும்,” என்று தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த புகார்கள் குறித்து பரிசீலனை செய்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நடிகர் தனுஷ் குறித்தும் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தேனாண்டால் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டிருந்த படத்தில் தனுஷ் முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இப்படத்துக்கான பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வந்தன. பின்னர் படப்பிடிப்பு தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. எனினும் சில காரணங்களால் அந்தப் படம் அதோடு நின்றுவிட்டது.
தனுஷுக்கு முன்பணமாக 20 கோடி ரூபாய் தயாரிப்புத் தரப்பில் இருந்து வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. திட்டமிட்ட படம் அரைகுறையாக நின்றுவிட்ட நிலையில், புதுப் படத்தில் நடித்துக் கொடுக்குமாறு தயாரிப்புத் தரப்பு வேண்டுகோள் விடுத்ததாம்.
ஆனால், தனுஷ் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று நடிகர் சங்கத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல். ஏற்கெனவே தனுஷ், சிம்பு உள்ளிட்டோர் மீது தயாரிப்பாளர் சங்கம் புகார் தெரிவித்திருந்தது.
விவரங்களை எல்லாம் கேட்டுக் கொண்ட நடிகர் சங்க நிர்வாகிகள் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்துள்ளனர்.


