முன்னணி நடிகையான சமந்தா சினிமாவைவிட்டுத் தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளார்.
குஷி, சிட்டாடல் படங்களை முடித்துவிட்டதால் ஓராண்டுகாலம் ஓய்வெடுக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி’ என்ற படத்தில் தற்போதுநடித்து வருகிறார்.சமந்தா இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே அமேசான் பிரைம் வீடியோவின், ’சிட்டாடல்’ என்ற இணையத் தொடரில் சமந்தா நடித்து வரும் நிலையில் அந்த தொடரிலும் தனது பகுதியின் படப்பிடிப்பை அவர் முடித்துவிட்டார்
புதிய தெலுங்கு, பாலிவுட் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த நிலையில் அந்தப் படங்களுக்காக வாங்கிய முன்பணத்தை அவர் திருப்பிக் கொடுத்துவிட்டார். புதிய ஒப்பந்தங்கள் எதிலும் அவர் கையெழுத்திடவில்லை.
தற்போது அவர் தனது உடல்நிலையைக் கவனிப்பதற்காகவும் கூடுதல் சிகிச்சை பெறவும் கிட்டத்தட்ட ஓராண்டு ஓய்வு எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமந்தாவுக்கு கடந்தாண்டு மிகவும் சோகமான, சிரமங்கள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது. கடந்தாண்டு இவருக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆறு மாதங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்தார்.
அதன் பின்னர் சினிமாவில் மீண்டும் பரபரப்பாகிவிட்ட சமந்தா, அண்மையில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் ‘குஷி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி உள்ளார். செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் அளித்த பேட்டியில் சமந்தா, “ஒருநாள் நான் குண்டாக இருக்கிறேன், ஒருநாள் நான் குண்டாக இல்லை. ஒருநாள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். நான் எப்படி இருக்கிறேன் என்பதில் எனக்குக் கட்டுப்பாடு இல்லை.
“வேடிக்கைக்காகவும், ஸ்டைலுக்காகவும் நான் கண்ணாடி அணிவதில்லை. வெளிச்சம் உண்மையில் என் கண்களைப் பாதிக்கிறது. எனக்கு கடுமையான ஒற்றைத் தலைவலி உள்ளது. என் கண்களில் கடுமையான வலி உள்ளது. கண்கள் வலியால் வீங்குகின்றன. கடந்த எட்டு மாதங்களாக இப்படியாகவே உள்ளது. இது ஒரு நடிகருக்கு நடக்கும் மிக மோசமான விஷயம்,” என்று கூறியிருந்தார்.
நடிகை சமந்தாவின் உடல்நிலை விரைவில் பரிபூரணமாக குணமடைய வேண்டும் என்றும் அவர் எப்போதும் மகிழ்ச்சியாகவும் உடல் நலத்தோடும் இருந்தாலே எங்களுக்கு போதும் என அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் நடிகை சமந்தாவுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.