அதிரடி நாயகனாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் தமக்கு இருந்ததில்லை என்கிறார் நடிகர் சித்தார்த். அதேசமயம் தம் மீது ‘காதல் நாயகன்’ என்ற முத்திரை விழுந்துள்ளதை மறுக்கவில்லை என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சித்தார்த் நடித்துள்ள புதிய படம் ‘டக்கர்’. கதைப்படி, அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வலம் வரும் இளைஞனாக நடித்துள்ளார்.
படம் பற்றி கூறுகையில், “ஒரு கட்டத்தில் அவன் கோபம் அதிகரிக்கிறது. நாள்களின் போக்கில் அவன் அடிதடியில் ஈடுபடுகிறான். நியாயமான காரணங்களின் பின்னணியில் கதாநாயகன் இவ்வாறு மாறுவதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். ஏனெனில், இந்தப் படத்துக்கான கதையை இயக்குநர் கார்த்திக் என்னிடம் விவரித்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது,” என்றார்.
“அதிரடி நாயகனாக பெயர் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.
‘டக்கர்’ படத்துக்காக வியட்நாமைச் சேர்ந்த தற்காப்பு கலைஞர்களிடம் பயிற்சி பெற்றேன். சண்டைக் காட்சிகள் இயல்பாக, நம்பும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக பாடுபட்டேன்.
“சண்டையின்போது கீழே விழுந்து புரள்வதில் தொடங்கி, அச்சண்டை முடிந்த பிறகும் நிமிர்ந்து நிற்பது வரை பலவிதமான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்.
“கடினமான தற்காப்புக் கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக அமைந்தது. இதுபோன்ற முயற்சிகளை எனது ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“நான் எப்போதுமே பணத்தைக் குறிவைத்துச் செயல்படுவதில்லை. பணத்தின் அடிப்படையில் நான் முடிவுகளை எடுப்பதும் இல்லை. சமூகம் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, சமூகத்தில் ஒருவனாக எனது பொறுப்புகளை உணர்ந்து செயல்படுகிறேன்.
அவை அனைத்துமே வெவ்வேறு கதைக் களங்களில் உருவாகி உள்ள படங்கள். ஒரு படம் நூறு கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ளது. ஆறு படங்களிலும் பல முன்னணி நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், புதுமுகங்கள் பணியாற்றி உள்ளனர்.
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ள சித்தார்த்துக்கும் இயக்குநராகும் ஆசை உள்ளது. எனினும், அதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்கிறார்.
“எனக்குள் உள்ள இயக்குநரை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவல் என்றுமே குறைந்ததில்லை. நான் இயக்கும் படத்தில் வேறு ஒருவர்தான் கதாநாயகனாக நடிப்பார். நிச்சயமாக அதில் நான் நடிக்க மாட்டேன்.
“எனினும், படம் இயக்குவது என்று முடிவாகிவிட்டால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது முடிவு. குறைந்தபட்சம், ஓராண்டு காலம் இயக்குநராக முதற்கட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் என்னை ஓர் இயக்குநராக நானே உணரத் தொடங்குவேன்.
“மேலும், ஒரு படத்தை இயக்கிய பிறகு, மீண்டும் நடிப்பைத் தொடர வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. அடுத்தடுத்து ஆறு தரமான படங்களின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். எனது உழைப்புக்கான ரசிகர்களின் அங்கீகாரம் எவ்வாறு உள்ளது என்பது விரைவில் தெரிய வரும். அதுவரை காத்திருப்பேன்,” என்கிறார் சித்தார்த்.


