இனி கனமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் மாளவிகா மோகனன்.
திரையுலகில் இதுவரை தாம் பெற்றுள்ள அனுபவங்கள் இத்தகைய உணர்வை ஏற்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னணி ஊடகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ‘பெரிய’ நடிகர்களுடன் இணையும்போதுதான் இளம் நடிகைகளுக்குப் பெயரும் புகழும் எளிதில் கிடைக்கிறது என்றார்.
“எனது திரையுலகப் பயணத்தின் முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்துள்ளேன். இதுவரை கிடைத்துள்ள அனுபவங்கள் இனிவரும் நாள்களில் எனக்கு உதவிகரமாக இருக்கும்.
“எனக்கான அடுத்த சுற்றில், ரசிகர்கள் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இனி அதுபோன்ற முயற்சிதான் ரசிகர்கள் என்னை நினைவில் வைத்திருக்க உதவும். இவ்வாறு பேசுவதற்கும் வாய்ப்புகளை தேடுவதற்கும் தேவைப்படும் பக்குவம் எனக்கு வந்துவிட்டதாகக் கருதுகிறேன்,” என்கிறார் மாளவிகா.
“இளம் நடிகைகள் தங்கள் திரைப்பயணத்தைத் தொடங்கும்போது, நட்சத்திர நடிகர்களுடன் நடித்தால் மட்டுமே உரிய வரவேற்பு கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடிகைக்கும் அதுதான் கற்பிக்கப்பட்டுள்ளது.
“பெரிய நடிகர்களுடன் நடிக்கும்போது ‘பெரியவர்களுடன்’ வேலை செய்கிறோம் என்ற உள்ளுணர்வு நினைவூட்டிக்கொண்டே இருக்கும். தொடக்கத்தில் இதுகுறித்து நிறைய யோசித்திருக்கிறேன்.
“எனினும் பெரிய நடிகருடன் பணியாற்றி ஒரே இரவில் வெற்றியைப் பெறும்போது வியப்பாக இருக்கும். சில சமயங்களில் நமது மதிப்பை அந்தப் பெரிய நடிகர்களுடன் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். இத்ததைய அனுபவம் எனக்கு உண்டு,” என்கிறார் மாளவிகா.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே ‘தங்கலான்’ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பல்வேறு சுவாரசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் மாளவிகா மோகன். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.
இப்படத்துக்காக 118 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாக அண்மையில் விக்ரம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்தது மறக்க இயலாத அனுபவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“ரத்தம், வியர்வை, கண்ணீர் என மூன்று வார்த்தைகளில் ‘தங்கலான்’ படம் குறித்து சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.
“நான் சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில், சூழலில் இந்தப் பட வாய்ப்பு என்னைத் தேடிவந்தது. மிகத் திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை ‘தங்கலான்’ படம் தந்துள்ளது. அவர்களில் சிலரது தீவிர ரசிகை என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்,” என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
இந்தப் படத்துக்காகச் சிலம்பாட்டம், குதிரையேற்றம் என்று பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்ட மாளவிகா, தங்கலான் நிச்சயமாக தமிழ் ரசிகர்களின் மனதைக் கவரும் என்று நம்புகிறார்.
அண்மையில் தன்னை மையப்படுத்தி உருவான சர்ச்சை குறித்து பேசுவதைத் தவிர்ப்பதாகச் சொல்பவர், இனி பொது வெளியில் கருத்து தெரிவிக்கும்போது மேலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருப்பதாகச் சொல்கிறார்.
“சில விவகாரங்கள் தொடர்பாக சிறு வயதில் எனது தாயார் கூறிய சில விளக்கங்களை அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை.
“இப்போது அவற்றுக்கான அர்த்தம் புரிகிறது,” என்கிறார் மாளவிகா மோகனன்.
தமிழில் முன்னணி இயக்குநரின் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகி உள்ள மாளவிகா, அண்மைக்காலமாக சமூக சேவையிலும் ஈடுபாடு காட்டி உள்ளார்.
நல்ல வாய்ப்புகள் அமைந்தால் தனது திறமையை நிரூபிக்க இயலும் என்றும் சொல்கிறார்.
மாளவிகா நடிக்கும் புதுப் படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

