தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள ஒருவரது மகன் தனக்கு ‘காதல் தொல்லை’ கொடுப்பதாக வெளிவந்துள்ள தகவல் முற்றிலும் பொய்யானது என்கிறார் நடிகை கிரித்தி ஷெட்டி.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள அவர், ரசிகர்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழில் ஜெயம் ரவியுடன் ஜீனி படத்தில் நடித்து வருகிறார் கிரித்தி.
இந்நிலையில், பிரபல நடிகரின் வாரிசு ஒருவர் கிரித்தி எங்கு சென்றாலும் பின் தொடர்வதாகவும் தம்மை காதலிக்கும்படி நச்சரிப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.
இதுகுறித்து கிரித்தி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. எனினும் தெலுங்கு ஊடகங்கள் சும்மா இருக்கவில்லை. இந்த இளம் நாயகியைப் பின்தொடரும் நடிகர் யார் என்பது தொடர்பாக பல்வேறு செய்திகளையும் தகவல்களையும் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், தமக்கு யாரும் எந்த வகையிலும் தொல்லை தரவில்லை என விளக்கம் அளித்துள்ளார் கிரித்தி.
“இது கொஞ்சமும் ஆதாரம் இல்லாத வதந்தி. என்னை எந்த நடிகரின் மகனும் பின்தொடரவில்லை.
“இதுவரை இதைக் கண்டு கொள்ளாமல்தான் இருந்து வந்தேன். ஆனால், போகிற போக்கில் இந்த விவகாரம் பெரிதாகும் எனத் தோன்றியதால் விளக்கம் அளித்துள்ளேன்,” என்று கிரித்தி ஷெட்டி கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
எனினும் எந்த நடிகரின் மகன் இவரைப் பின்தொடர்ந்தார் எனும் ஆராய்ச்சியை ரசிகர்கள் கைவிட்டதாகத் தெரியவில்லை.
இதற்கிடையே, தமிழில் ‘வணங்கான்’ படத்தில் இருந்து விலகியது கிரித்திக்கு பெரும் வருத்தம் அளித்துள்ளது. சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு பறிபோனாலும் ஜீனி படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்தது ஆறுதல் அளிப்பதாகச் சொல்கிறார்.
“தமிழ் ரசிகர்கள் எனது நடிப்பையும் நடனத்தையும் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்பதே எனது முதன்மை விருப்பம்,” என்கிறார் கிரித்தி.

