சிறந்த நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்ற பின்னர் தமக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இனி எல்லாருடைய கவனமும் தன் மீது திரும்பும் என்பதை உணர்ந்திருப்பதாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“இனி சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாலும்கூட ரசிகர்கள் என்னை உற்றுக் கவனிப்பார்கள். என்னுடைய நடிப்பு அனைவராலும் விமர்சிக்கப்படும். எனவே கதாபாத்திரங்களை கவனமாகத் தேர்வு செய்வேன்.
“ஆனால் எல்லாமே ‘மகாநதி’ படம் மாதிரி அமைந்துவிடாது. சில காலம் நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்கள் வேண்டாம். காத்திருப்போம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அதே மாதிரியான கதைகள்தான் தொடர்ந்து தேடி வந்தன. ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகுதான் ‘அண்ணாத்த’ பட வாய்ப்பு கிடைத்து. அதன் பிறகு மறுபடியும் ‘குட்லக் சாகி’, ‘வாஷி’, ‘சாணிகாயிதம்’, கடைசியாக அரசியல் படமான ‘மாமன்னன்’ வரை நடித்துள்ளேன்,” என்கிறார் கீர்த்தி.
தாம் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதாக வெளிவந்துள்ள செய்தியைக் கேட்டு சிரிப்புதான் வந்தது என்று குறிப்பிடுபவர், அரசியல் களத்தில் கால்பதிப்பது சாதாரண விஷயமல்ல என்கிறார்.
“ஒருசிலர் ‘சர்கார்’ படத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதில்லேசாக அரசியல் கலந்திருக்கும். அதில் நடித்தது முதல் அரசியல் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.
“அரசியலில் கால்பதிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. பேசுவதற்கு சுவாரசியமாக இருக்குமே தவிர, என்னைப் போன்றவர்களுக்கு அரசியல் களம் எல்லாம் சரிப்பட்டு வராது,” என்று தெளிவாகப் பேசுகிறார் கீர்த்தி.
ராஜமௌலி, சங்கர், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களின் படங்களில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுவதாகச் சொல்பவர், சிறிய வேடம் என்றாலும் கால்ஷீட் ஒதுக்கத் தயார் என்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
தன்னைப் பற்றி வெளியாகும் கிசுகிசுக்கள் குறித்து கீர்த்தி அறவே கவலைப்படுவதில்லை. நண்பர் ஒருவருக்கு வெளிப்படையாக வாழ்த்து சொன்னதை அடுத்து அவர்தான் தனது காதலர் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதைச் சுட்டிக்காட்டுகிறார்.
“எனக்கு சமூக ஊடகங்கள் மூலம் பலமுறை திருமணம் செய்து வைத்துள்ளனர். நான் வாங்கும் சம்பளம் குறித்தும் கற்பனையாக பெருந்தொகையைக் குறிப்பிட்டுள்ளனர்.
“இவ்வளவு நடந்தும்கூட எனக்கு எப்போது திருமணம் என்று உறவினர்கள் யாரும் கேட்கவில்லை. அது மட்டுமே ஆறுதலான விஷயம்,” என்று சொல்லும் கீர்த்திக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற ஆசை உள்ளது.
அதற்கு மனதளவில் தயாராகி வருவதாகவும் நல்ல கதை ஒன்றை எழுதி உள்ளதாகவும் சொல்கிறார்.
என்றாவது ஒருநாள் கீர்த்தி இயக்கும் படம் என்ற அறிவிப்பு வரும் என்று குறிப்பிடுபவர், அந்த நாள் விரைவாக வர வேண்டும் என்று விரும்பவில்லை என்கிறார்.
தற்போது சிரஞ்சீவியுடன் நடித்துள்ள ‘போலா ஷங்கர்’ தெலுங்குப் படம், ஜெயம் ரவியின் ‘சைரன்’, நேர்மறை நகைச்சுவைப் படமான ‘ரகுதாத்தா’ ஆகியவற்றின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார் கீர்த்தி.
மேலும், ‘தமிழ்ப்படம்’ இயக்குநர் கே.சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படமும் வேகமாக உருவாகி வருகிறதாம். இன்னும் சில பெரிய அறிவிப்புகள் சீக்கிரம் வரும் என்று சிரித்தபடியே கண்சிமிட்டுகிறார் கீர்த்தி.
“நான் தொடர்ந்து நாயகியை மையப்படுத்தும் கதைகளில் மட்டுமே நடிப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். நானாக அவ்வாறு எந்த முடிவும் எடுக்கவில்லை. தேடி வரும் வாய்ப்புகளைதான் பரிசீலித்து எனக்கு ஒத்துவரக்கூடிய படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்கிறேன்.
“மிக விரைவில் வணிகப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடிவரக்கூடும். அத்தகைய படங்களில் நடிக்க எனக்கும் ஆர்வம் உண்டு.
“அதேசமயம் மிகச் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய படங்கள் அமைவதை எனது திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
“அதுமட்டுமல்ல, நாயகிக்கு முன்னுரிமை அளிக்கும் படங்களில் நடிப்பதன் மூலம் எனது திரைப்பயணத்தின் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றதாக உணர்கிறேன். எனது திரையுலக நண்பர்களும் அவ்வாறுதான் கருதுகிறார்கள்,” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

