‘மாமன்னன்’ படத்தின் வசூல் ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
அதிலும் படத்தின் நாயகன் உதயநிதி, ரசிகர்களின் வரவேற்பு தம்மை வெகுவாக நெகிழ வைத்துள்ளது என்கிறார்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இப்படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலு தான் என்றார்.
“ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவர்க்கும் நன்றி. இந்தப் படத்திற்கு நாங்கள் (படக்குழு) கொடுத்த விளம்பரத்தைவிட செய்தியாளர்களும் தரமான ரசிகர்களும் கொடுத்த விளம்பரத்தால்தான் மக்கள் மத்தியில் இப்படத்தை எளிதில் கொண்டு போய் சேர்க்க முடிந்தது,” என்றார் உதயநிதி.
தமிழ், மலையாளம், கன்னடம் என மொத்தம் ஒன்பதே நாள்களில் மாமன்னன் படம் 52 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தனது முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யைப் போன்று கடைசிப் படமும் வெற்றி பெற்றுள்ளது என்றார்.
“வடிவேலு அண்ணன் நடிக்க ஒத்துக்கவில்லை என்றால் இந்தப் படம் வேண்டாம். வேற படம் ஏதாவது பண்ணலாம் என்று இயக்குநரிடம் சொன்னேன். `மாமன்னன்’ 50ஆவது நாள் விழா தான் என்னுடைய சினிமா பயணத்தின் கடைசி மேடையாக இருக்கும்,” என்றார் உதயநிதி.
தன்னுடன் இணைந்து பணியாற்றிய கீர்த்தி சுரேஷ், நடிகர் ஃபஹத் பாசில், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இயக்குநர் மாரி செல்வராஜின் அன்பான குடும்பத்துக்கும் நன்றி என்றார்.
“நான் எந்த நம்பிக்கையில் என் கடைசிப் படத்தை இயக்குங்கள் என்று மாரியிடம் கேட்டுக்கொண்டேனோ, அதை அவர் சிறப்பாகச் செய்துள்ளார். எனது விருப்பத்தை அவர் நிறைவேற்றி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் இந்தப் படம் நிறைவான வசூலைப் பெற்றுள்ளது. எல்லாம் சேர்ந்துதான் ஒன்பது நாள்களில் ரூ.52 கோடியை எட்டியுள்ளது,” என்றார் உதயநிதி.
படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் கடுமையாக உழைத்தனர் என்றும் அவர்களின் முதல் படம் வெளியாகும் முன்பே தரமான இயக்குநர்களாக உருவாகிவிட்டனர் என்றும் உதயநிதி பாராட்டினார்.