[ο]சிவகார்த்திகேயன் மிக விரைவில் இந்தியில் அறிமுகமாகிறார். இத்தகவலை தெலுங்கு இயக்குநர் அட்விசேஷ் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் தெலுங்கில் ‘மகாவீருடு’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. அப்படத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய அட்விசேஷ், சிவகார்த்திகேயன், பெரிய மனம் கொண்ட பெரிய நட்சத்திரம் என்று குறிப்பிட்டார்.
மேலும், “சிவா விரைவில் இந்தியில் அறிமுகமாக உள்ளார். இந்தத் தகவலை வெளிப்படையாகத் தெரிவித்ததற்காக அவர் மன்னிக்க வேண்டும்,” என்றார் அட்விசேஷ்.
இந்தத் தகவல் சிவா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
[ο]கடவுள் ஒவ்வொருவரையும் தனிக் கவனம் எடுத்து படைத்து வருகிறார் என்றும் அந்த உருவத்தை மாற்றிக்கொள்வதற்கு செய்யும் முயற்சிகள் அனைத்துமே வீணானவை என்றும் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.
இளம் கதாநாயகிகள் அழகுக்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
“நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் எனது உடல்வாகு, நிறம் குறித்து நிறைய விமர்சனங்கள் வந்தன. அதற்காக எப்போதுமே நான் வருத்தப்பட்டது இல்லை.
தொடர்புடைய செய்திகள்
“அறுவை சிகிச்சை செய்து கொள்வது குறித்தும் நான் யோசித்தது இல்லை. வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பில் திறமையை வெளிப்படுத்தி என்னை மெருகேற்றிக்கொண்டேன். அதனால்தான் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தேன்,” என்கிறார் கஜோல்.
[ο]‘தங்கலான்’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தனது 62வது படத்துக்குத் தயாராகி வருகிறார் விக்ரம். லோகேஷ் கனகராஜின் உதவியாளர் மகேஷ் சுப்ரமணியன் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் எழுதிய கதை, திரைக் கதையில் விக்ரம் நடிப்பதாகவும் அவர் நடித்த ‘கோப்ரா’ படத்தை தயாரித்த ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இந்த நிறுவனம்தான் விஜய்யின் ‘லியோ’ படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் புதிய படத்திலும் விக்ரமின் தோற்றம் வித்தியாசமாக இருக்கும். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாக உள்ளது.
[ο]காஷ்மீரில் இருந்தபடியே அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார் சாய் பல்லவி.
அங்குள்ள சூழல் தமக்கு மிகவும் பிடித்துப்போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “மனநிலை - அமைதி” என்று அவர் குறிப்பிட்டுள்ள பதிவுக்கு ரசிகர்கள் பலர் பின்னூட்டமிட்டுள்ளனர். அவர்களில் சிலர், காஷ்மீரைப் போலவே சாய் பல்லவியும் அழகாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

