ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜெயிலர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ‘காவாலா’ என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இப்பாடலுக்கு மிகச் சிறப்பாக நடனமாடி இருந்தார் தமன்னா. பாடல் வெளியானதை அடுத்து நடிகர், நடிகைகள் மட்டுமின்றி ஏராளமான ரசிகர்களும் தமன்னாவைப்போல் நடனமாடி காணொளி வெளியிட்டு வருகின்றனர்.
இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தப் பாடலை பார்த்து ரசித்து உள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பாடலை தமன்னாவின் காதலரான நடிகர் விஜய் வர்மாவும் பார்த்து ரசித்துவிட்டு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவைக் கொடுத்துள்ளார்.
அதில், “பாடல் நெருப்பாக உள்ளது. சினிமாவின் பெண் கடவுள் தமன்னாவின் நடனம் அற்புதம்,” எனப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.
தமன்னாவுக்கு விருது
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த ‘கண்ணே கலைமானே’ படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்படம் தற்போது அனைத்துலக அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரான்சில் நடந்த இந்தோ-பிரெஞ்சு அனைத்துலகத் திரைப்பட விழாவில் ‘கண்ணே கலைமானே’ படம் திரையிடப்பட்டு மூன்று விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த தயாரிப்பாளருக்கான விருது உதயநிதி ஸ்டாலினுக்கும் சிறந்த நடிகைக்கான விருது தமன்னாவுக்கும் சிறந்த துணை நடிகைக்கான விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்துள்ளது. இந்த விருதுக்காகவும் ரசிகர்கள் தமன்னாவைப் பாராட்டி வருகின்றனர்.

