நமக்கு கைநிறைய சம்பளம் வந்தால் போதும், தயாரிப்பாளருக்குப் எந்தப் பிரச்சினை வந்தால் என்ன என்று நடிகர்கள் ஒதுங்கி இருக்கமுடியாது என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நாம் நடித்துள்ள எந்த ஒரு படமாக இருந்தாலும் அதன் லாப நஷ்டங்களில் நமக்கும் பங்கிருக்கிறது.
நமது பங்களிப்புள்ள படத்திற்கு பிரச்சினை வருகிறது என்றால் கண்ணை மூடிக்கொண்டு சென்று விடாமல் முடிந்தவரை அதனைத் தீர்த்து வைப்பதை நடிகர்கள் கடமையாகக் கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படம் இம்மாதம் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் அதிதி சங்கர், யோகி பாபு, சரிதா, சுனில், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “மண்டேலா’ படத்தின் கதையமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் படத்தின் ஈர்ப்பினால்தான் மாவீரனில் நடித்துள்ளேன்.
“மாவீரனில் ஓவியனாக நடித்திருக்கிறேன். நான் வரையும் ஒரு படக்கதையின் தலைப்புதான் ‘மாவீரன்’. அதிதி சங்கர் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார்.
“படம் தயாரிப்பது, தயாரிப்பாளருக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பது போன்ற விஷயங்களைத் தவிர்த்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தலாமே என்று ஒரு சிலர் கேட்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகர் படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தாவிட்டாலும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.
“படம் சம்பந்தமாக எழும் எந்தச் சிக்கலாக இருந்தாலும் அதனைத் தீர்த்து வைக்க நடிகர்கள் அக்கறை காட்டவேண்டும்,” என்று கூறியவர், ‘மாவீரன்’ படத்திற்கு தான் குறைந்த சம்பளமே வாங்கியதாக வெளிவந்த தகவல் தவறானது என்றும் மறுத்துள்ளார்.
“எனக்கான சம்பளத்தை நான் வாங்கி உள்ளேன். ‘ரஜினி முருகன்’ படம் வெற்றிப்படமாக இருந்தாலும் எனக்கான சம்பளம் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
இன்னொரு படத்தின் சம்பளத்தை நீதிமன்றம் வரை சென்றுதான் வாங்கவேண்டி இருந்தது.
இதையெல்லாம் தாண்டித்தான் ஒரு நடிகனாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியது இருக்கிறது.
என் வாழ்க்கையில் நான் அதிக அளவில் சவால்களைக் கடந்துதான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.
நான் ‘ரிஸ்க்’ எடுக்கவில்லை என்றால் எம்பிஏ முடித்தவுடன் வேலைக்குச் சென்றிருப்பேன்.
ஒரு நகைச்சுவையாளனாக இருந்த என்னை மெல்ல மாற்றினேன். அதில் வெற்றியும் பெற்றேன். எனினும் இப்படியே பயணிக்க முடியாது என்பதால் வெவ்வேறு புதிய சிந்தனைகளுடன் வரும் இயக்குநர்களுடன் பயணித்து வெவ்வேறு விதமான கதைக் களங்களில் நடிக்கிறேன்.
இதற்கு முன்பு வெளியான ‘ப்ரின்ஸ்’ படம் தோல்வியடைந்த நிலையில் இந்தப் படம் தனக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை, ஹைதராபாத்தில் நடந்தது.
ஹைதராபாத் நிகழ்வில் பேசிய தெலுங்கு நடிகர் அதிவி சேஷ், “சிவகார்த்திகேயன் பெரிய நடிகர் மட்டுமல்ல. பெரிய மனம் படைத்த நடிகர் என்பதை தெரிந்துகொண்டேன். தெலுங்கைத் தொடர்ந்து விரைவில் அவர் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்,” எனப் பேசிய அவர் சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பி சாரி சார், இந்தச் செய்தியை ரகசியமாக வைத்திருக்காமல் போட்டு உடைத்து விட்டேன்” என்றார்.
அவர், இதுபோல் கூறியதற்கு சிவகார்த்திகேயன் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.
தற்போது இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

