தனது தந்தையின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் அதிதி சங்கர்.
எனினும் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் தாம் நடிக்க வாய்ப்பில்லை என்கிறார்.
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநரின் மகள் என்கிற எண்ணம் இல்லாமல் அனைவருடனும் இயல்பாகப் பேசிப்பழகக் கூடியவர் என்ற நற்பெயரைப் பெற்றுள்ளார் அதிதி.
ஆசைக்காக ஒரு படத்தில் நடித்த பிறகு கோடம்பாக்கத்தில் இருந்து மூட்டை கட்டிவிடுவார் என்பதே அதிதி குறித்து கோடம்பாக்க விவரப் புள்ளிகளின் கணிப்பாக இருந்தது.்
ஆனால் ‘விருமன்’, ‘மாவீரன்’ படங்களை அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மூன்றாவது படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார் அதிதி.
“அப்பாவின் இயக்கத்தில் நடிக்கும் ஆசை எனக்கும் உள்ளது.
‘இந்தியன் 2’ படத்தை அப்பா தொடங்கிய பிறகுதான் நான் நடிக்க வந்தேன். அதனால் திடீரென்று எனக்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க முடியாது.
“என்னதான் நடிகையாகிவிட்டாலும் அப்பா படத்தின் படப்பிடிப்புக்கு செல்வதும் அவர் படம் இயக்கும் சுறுசுறுப்பைக் கவனிக்கவும் தவறுவதே இல்லை. அவருடன் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் நாம் எதையாவது கற்றுக்கொள்ள முடியும்.
தொடர்புடைய செய்திகள்
“இப்போது நானும் மூன்றாவது படத்தில் ஒப்பந்தாமி இருப்பதால் அதற்கென நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது,” என்கிறார் அதிதி.
‘திருச்சிற்றம்பலம்’ இயக்குநர் மித்ரன், ‘லவ் டுடே’ இயக்குநர் பிரதீப் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது அதிதியின் ஆசை. இன்றைய இளையர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இவர்கள் படங்களை இயக்குவதாகப் பாராட்டுகிறார்.
“சில நடிகைகள் படங்கள் இயக்க விரும்புகிறார்கள். அதுபோன்ற ஆசை எனக்கும் உள்ளதா என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை.
“அதேசமயம் இசை மீது எனக்குள்ள ஆர்வம் குறித்து அனைவருக்கும் தெரியும். இசைத்தொகுப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்று ஆசை உள்ளது.
“அதற்காக நேரம் ஒதுக்கி உழைத்து வருகிறேன். என்ன மாதிரியான இசைத்தொகுப்பு என்பதை இப்போதே விவரிக்க இயலாது. சிறுசிறு குறிப்புகளாக மட்டுமே எழுதி வைத்துள்ளேன். அவற்றுக்கு விரைவில் வடிவம் கொடுக்க இயலும் என நம்புகிறேன். அவ்வாறான வடிவம் அமைந்ததும் அனைவருடனும் விவரங்களைப் பகிர்ந்து கொள்வேன்,” என்கிறார் அதிதி.
திரையுலகிலும் தனிப்பட்ட வகையிலும் தாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவு முழுமையாக உள்ளதாகக் குறிப்பிடுபவர், தமக்கு எந்த வகையிலும் தந்தை சங்கர் சிபாரிசு செய்வதில்லை என்கிறார்.
“இதுதான் நூறு விழுக்காடு உண்மை. சங்கர் என்ற இயக்குநரின் மகளாக யாரும் என்னைத் தேடி வருவதில்லை. அதிதி என்ற பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும் என யோசித்து, அதன் பிறகே எனக்கு வாய்ப்பளிக்கின்றனர்.
“எனினும் தேடி வரும் கதைகளை அப்பாவிடம் சொல்லி விவாதிப்பேன். அவரது அனுமதியுடன்தான் படங்களை ஏற்கிறேன்,” என்கிறார் அதிதி.