நிகிலா: எண்ணிக்கை அல்ல, தரம்தான் முக்கியம்

3 mins read
18fb96e4-8462-4a86-b8dd-f83e1a21e3b1
நிகிலா விமல். - படம்: ஊடகம்

தாம் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைவிட அவற்றின் தரம்தான் முக்கியம் என்கிறார் நடிகை நிகிலா விமல்.

அண்மையில் வெளியான ‘போர்த்தொழில்’ படத்தின் மூலம் கோடம்பாக்கத்து ரசிகர்களின் கவனத்தை இவர் மீண்டும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

தமிழ் மொழி மீது தனக்கு எப்போதுமே தனிப்பற்று உள்ளது என்றும் அதன் காரணமாக தமிழில் ஓரளவு சரளமாகப் பேச கற்றுக் கொண்டுள்ளதாகவும் அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் நிகிலா.

“தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணியில் உள்ள நடிகர், நடிகையரைவிட என்னால் நன்றாகத் தமிழ் பேச முடியும். வாய்ப்புகளுக்காக நான் தமிழ் கற்கவில்லை. அதுதான் உண்மை என்றால், தமிழில் பேச மட்டுமே பயிற்சி மேற்கொண்டிருப்பேன். ஆனால் எனக்கு தமிழில் எழுதவும் வரும்,” என்று சொல்லும் நிகிலா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் நடித்தது உற்சாகத்தையும் புது நம்பிக்கையையும் தந்துள்ளதாகச் சொல்கிறார்.

சசிகுமாருடன் ‘கிடாரி’, கார்த்தியுடன் ‘கைதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள போதிலும் தமிழில் தனக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்பவர், ‘போர்த் தொழில்’ படம் தற்போதுள்ள நிலையை மாற்றியமைக்கும் என நம்புவதாகச் சொல்கிறார்.

“இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது. அசோக் செல்வன், சரத்குமார் ஆகிய இருவருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன.

“இந்தப் படத்தில் நானும் நடித்துள்ளேன் என்பது பெரும்பாலான ரசிகர்களுக்கு முதலில் தெரியாது. காரணம், படத்தின் விளம்பரச் சுவரொட்டிகளில் அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

“ஆனால் படம் வெளியீடு கண்டதும் நிலைமை மாறிவிட்டது. கேரளாவில் இருந்து ரசிகர்கள், திரையுலகக் கலைஞர்கள் என ஏராளமானோர் கைப்பேசியில் தொடர்புகொண்டு என் நடிப்பைப் பாராட்டுகிறார்கள்.

“கேரளாவில் ‘போர்த்தொழில்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இந்தப் படம் தமிழில் எனக்குப் புதுப்பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார் நிகிலா விமல்.

கடந்த 2015ஆம் ஆண்டு தமிழிலும் மலையாளத்திலும் ஒருசேர அறிமுகமான இவருக்கு சில நல்ல வாய்ப்புகள் அமைந்தன. சில வெற்றிப் படங்களில் நடித்த போதிலும், தமிழில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

மலையாளத்தில் கிடைத்த வாய்ப்புகள் நம்பிக்கையுடன் காத்திருக்க வைத்ததாகக் குறிப்பிடுபவர், ‘போர்த்தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா அந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றியதாகச் சொல்கிறார்.

“அவர் என்னிடம் கதையை விவரித்தபோதே இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். எனது கதாபாத்திரத்துக்கு படம் முழுவதும் காட்சிகள் இல்லையென்றாலும், எனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதை அவர் தெளிவாக எடுத்துச் சொன்னார். அதன் பிறகு தயக்கமின்றி நடிக்க ஒப்புக்கொண்டேன்.

“கதாநாயகி என்றால் ஆடல், பாடலுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை எப்போதோ மாறிவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பின்போது இந்த உண்மையை மனதார உணர்ந்தேன். இதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும்,” என்கிறார் நிகிலா.

இவரது பொறுமைக்கும் திறமைக்கும் நல்ல பரிசும் கிடைத்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வரும் வாழை படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

“மாரி செல்வராஜ் அலுவலகத்தில் இருந்து என்னைத் தொடர்புகொண்டபோது உற்சாகத்தில் மிதந்தேன். இப்படிப்பட்ட வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என உடனடியாக முடிவு செய்தேன். இந்தப் படத்திலும் எனது கதாபாத்திரத்துக்கான காட்சிகள் குறைவாகவே இருக்கும். ஆனால் அந்தப் பாத்திரத்துக்கான முக்கியத்துவத்தை அளித்துள்ளார் இயக்குநர் மாரி. இந்தப் படமும் எனக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும்.

“தமிழில் ஏன் அதிகம் நடிப்பதில்லை என்று சிலர் கேட்கின்றனர். அதிக படங்களில் நடிக்கும் ஆசை எனக்கும் உள்ளது. எனக்கு எண்ணிக்கை முக்கியம் இல்லை. தரமான படைப்புகளில் நானும் இருக்க வேண்டும், தரமான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது இலக்காக உள்ளது,” எனத் தெளிவாகவும் உறுதியாகவும் பேசுகிறார் நிகிலா விமல்.

குறிப்புச் சொற்கள்