கராத்தே தற்காப்புக் கலையில் ‘பிளாக் பெல்ட்’ வாங்கி சாதித்துள்ளார் நடிகை ரித்திகா சிங்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற அனைத்துலக கராத்தே போட்டியில் பங்கேற்று இதைச் சாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் தேர்ச்சி பெற்றதை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது தந்தைக்கும் மற்ற இந்திய வீரர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
தற்போது ‘கொலை’ என்ற தலைப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்துக் கொண்டே தீவிர கராத்தே பயிற்சி மேற்கொண்டு ரித்திகா சாதித்துக் காட்டியுள்ளதாக அவரது நலன்விரும்பிகள் கூறுகின்றனர்.
ரித்திகாவின் தந்தையும் சகோதரரும்கூட குத்துச்சண்டை வீரர்கள்தான். ‘கிக் பாக்சிங்’ கலையிலும் நன்கு தேர்ச்சி பெற்றுள்ள ரித்திகா, இது தொடர்பான போட்டிகளிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துப் பங்கேற்றுள்ளார்.

