முன்னணி கதாநாயகிகளை தாம் ஒருபோதும் போட்டியாகக் கருதியதில்லை என்கிறார் இளம் நாயகி வாணி போஜன்.
குறிப்பாக, பிரியா பவானி சங்கருக்கும் தமக்கும் இடையே தொழில் ரீதியில் போட்டி நிலவுவதாகக் கூறப்படுவதை திட்டவட்டமாக மறுக்கிறார்.
நடிகர் பரத் நடிப்பில் உருவாகி உள்ள ஐம்பதாவது படம் ‘லவ்’. இதில் அவரது ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார், மலையாள இயக்குனர் ஆர்.டி.பாலா இயக்கி உள்ளார்.
எதிர்வரும் 28ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வாணி போஜன், திருமணத்திற்குப் பிறகு கணவன், மனைவிக்குள் வரும் சண்டை சச்சரவுகளை மையமாக வைத்து ‘லவ்’ படம் உருவாகி உள்ளது என்றார்.
“இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை யோசிக்க வைக்கும். திகிலும் மர்மங்களும் நிறைந்த கதையை சுவாரசியமாகத் திரையில் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குநர்.
“நான் கணவனை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சலான மனைவியாக நடித்திருக்கிறேன். பரத்துடன் இதற்கு முன் ‘மிரள்’ படத்தில் நடித்தேன். இது இரண்டாவது படம்.
“அடுத்து ராதா மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். பல வருடங்களுக்குப் பிறகு தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்கிறேன்,” என்றார் வாணி போஜன்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆண்டு இறுதிக்குள் தாம் நடித்து முடித்துள்ள பல படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளது உற்சாகம் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எந்தக் காலகட்டத்திலும் வாய்ப்புகளுக்காகத் தாம் அலைந்து திரிந்ததில்லை என்றார்.
தன்னைப் போன்றே சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதால் பிரியா பவானி சங்கரை தமக்குப் போட்டியாளராக வாணி கருதுகிறார் என்று பேசப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை என்கிறார் வாணி.
“பிரியாவை ஒரு போட்டியாளராக நான் நினைத்ததே இல்லை. அவரும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாகவும் அவரை ஒப்பந்தம் செய்கின்றனர்.
“நல்ல தோழி என்ற வகையில் இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு அவ்வப்போது வாழ்த்தும் தெரிவிப்பேன். இதுதான் உண்மை,” என்றார் வாணி போஜன்.
திரையுலகில் எல்லாருக்குமே உரிய வாய்ப்புகள் கிடைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இனி போட்டி, பொறாமைக்கு இடமில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
“பிரியா பவானி சங்கர் தன் வழியில் சென்று கொண்டிருக்கிறார். அதேபோல் நானும் எனக்கான திட்டங்களை வகுத்துக்கொண்டு ஒரு பாதையில் செல்கிறேன். எங்கள் இருவரையும் இவ்வாறு ஒப்பிட்டுப் பேசுவதே தேவையில்லாத ஒன்று,” என்கிறார் வாணி.
எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் இவ்வளவு காலம் தாக்குப்பிடித்து நிற்பதையே பெரும் சாதனையாகக் கருதுவதாகவும் இதுவரை தாம் கடந்து வந்துள்ள பாதையில் மகிழ்ச்சியான அனுபவங்கள்தான் அதிகம் என்றும் வாணி கூறுகிறார்.

