ஐஸ்வர்யா: பயத்துடன் கையில் துப்பாக்கி ஏந்தினேன்

3 mins read
2609d6a8-125a-43e9-a050-d79d44572033
ஐஸ்வர்யா மேனன். - படம்: ஊடகம்

திரையுலகில் அறிமுகமான வேகத்தில் பல படங்களில் நடித்துள்ள போதிலும், இப்போதுதான் மனதுக்குப் பிடித்தமான கதாபாத்திரங்கள் அமைவதாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

பொறியியல், மருத்துவம் படித்துவிட்டு திரையுலகுக்கு வந்தவர்களின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு.

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘தமிழ்படம் 2’, ‘நான் சிரித்தால்’, ‘தமிழ் ராக்கர்ஸ்’, ‘வேழம்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர், பல்வேறு மொழி களில் உருவான ‘ஸ்பை’ படத்தின் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் நாயகியாக உருவெடுத்துள்ளார்.

“நாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் தேடி வருகின்றன. அந்த வகையில் உற்சாகமாக உணர்கிறேன்.

“எந்த வெற்றியும் எளிதில் அமைந்துவிடாது என்பதற்கு ‘ஸ்பை’ படம் நல்ல எடுத்துக்காட்டு. அந்தப் படத்துக்காகத்தான் முதன்முறையாகத் துப்பாக்கியைக் கையில் ஏந்தினேன்; சண்டைப் பயிற்சியும் பெற்றேன்.

“நேரடித் தெலுங்குப் படம் என்றாலும் மற்ற மொழிகளிலும் வெளியானதால் பலமொழி ரசிகர்களின் மனதையும் கவர முடிந்தது. எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்த இயக்குநருக்கு நன்றி,” என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

தெலுங்கு, தமிழ்த் திரையுலகில் தம்மை அன்பாகக் கவனித்துக் கொள்வதாகக் குறிப்பிடுபவர், நிபந்தனையற்ற அன்பு மேலும் உற்சாகத்துடன் பணியாற்றத் தூண்டுவதாகச் சொல்கிறார்.

“அந்தப் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கேரி சொன்னபோது முதலில் தயக்கமாக இருந்தேன். ஆனால் எவ்வாறு துப்பாக்கி ஏந்த வேண்டும், உளவு அதிகாரியின் உடல்மொழி, பேசும் விதம் என எல்லாவற்றுக்கும் பயிற்சி அளித்தனர்.

“நாயகன் நிகில், நான் உட்பட சண்டைக்காட்சியில் பங்கேற்ற அனைவருக்குமே துப்பாக்கியால் சுட ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. ஹாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பாபி என்பவர்தான் பயிற்சி அளித்தார். முதலில் பயத்துடன் கையில் துப்பாக்கி ஏந்தினேன். அதன் பிறகு துணிச்சல் வந்துவிட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குத்துச்சண்டையும் கற்றுக்கொண்டேன்,” என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த விருப்பம் உள்ள இவர், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாள்தோறும் காலையில் உடற்பயிற்சி மேற்கொள்ள தவறமாட்டாராம். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்ததால்தான் ‘ஸ்பை’ படத்தில் நடிக்க முடிந்தது என்கிறார்.

இனி அதிக சம்பளம் என்பதற்காக கவர்ச்சிப் பதுமையாக திரையில் தோன்றுவதில் தமக்கு விருப்பம் இல்லை என்று குறிப்பிடுபவர், முக்கியத்துவம் உள்ள பாத்திரம் என்றால் ஒரு காட்சியில் மட்டுமே நடிப்பதற்கும் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.

ஐஸ்வர்யா மேனனுக்குப் பிடித்த நடிகை ஆலியா பட். எந்தப் பேட்டியாக இருந்தாலும் ஆலியாவைப் புகழ்ந்து ஓரிரு வரிகளாவது பேசிவிட வேண்டும் என்பதைக் கொள்கையாகவே வைத்துள்ளார்.

“ஆலியா பட் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்துமே வித்தியாசமானவையாக இருக்கும்.

“அவரைத்தான் எனது முன்மாதிரியாகக் கொண்டுள்ளேன். அவரைப் போல் நடிக்க விரும்புகிறேன்.

“தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடிக்க விரும்புகிறேன். நடிகர்களில் நாக சைதன்யா, அல்லு அர்ஜுன் ஆகிய இருவரையும் அதிகம் பிடிக்கும்,” என்று சொல்லும் ஐஸ்வர்யா தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இவரது குடும்பத்துக்கும் திரையுலகுக்கும் எந்த வகையிலும் தொடர்புகள் கிடையாது. வீட்டில் எல்லாருமே அதிகம் படித்தவர்களாம். இவர் மட்டும்தான் திரையுலகில் இயங்கி வருகிறார்.

“சில முயற்சிகள் தோல்வியடையலாம். சில முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கலாம். எல்லாமே முயற்சியில்தான் இருக்கிறது. நிராகரிப்பு, தோல்விகள் ஆகியவற்றை நல்ல பாடமாக, அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் திரையுலகம் எனக்குக் கற்றுத் தந்துள்ளது,” என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

என்னதான் தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைத்தாலும் தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தப் போவதாகவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புவதாகவும் சொல்கிறார்.

குறிப்புச் சொற்கள்