திரைப்பட நடிகையாகும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால், திருமணம் செய்துகொண்டு இல்லத்தரசியாக வலம் வந்திருப்பேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பவர் என்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற இவருக்கு அனைவரையும் பயமுறுத்தும் வகையில் பேய் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
“பேய் கதாபாத்திரம் என்றால் அச்சுறுத்தும் ஒப்பனையுடன் வசனங்களை உரக்கப் பேசினால் மட்டும் போதாது. மிரட்டலான நடிப்பும் தேவை. பேயாக நடிக்க ஆசை என்றாலும் அதற்கேற்ற கதைகள் இன்னும் அமையவில்லை,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
வித்தியாசமான முயற்சிகளில் பங்கெடுக்க விரும்புவதாகச் சொல்பவர், ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்துக்காக கெட்ட வார்த்தைகள் பேசுவதோ, கவர்ச்சி காட்டுவதோ எந்த வகையிலும் தவறில்லை என்கிறார்.
“நாம் நடிக்கக்கூடிய கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ, அதுவாக மாறிவிட வேண்டும். அந்த வகையில்தான் ‘வடசென்னை’ படத்துக்காக கெட்ட வார்த்தைகளைப் பேச வேண்டி இருந்தது.
“எனினும், ரசிகர்கள் அதனால் முகம் சுளிக்கவில்லை. மாறாக நான் நடித்த காட்சிகளை ரசித்துப் பார்த்தனர். இதுதான் கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் இடையேயான வித்தியாசம்.
“அதுமட்டுமல்ல, படம் வெளியான பிறகு மிக அழகாகப் பேசி நடித்திருப்பதாகப் பலரும் பாராட்டினர். சில வசனங் களைப் பேசும்போது எனக்கும் சங்கடமாக இருந்தது. எனினும் இயக்குநர் வெற்றி மாறன் காரணமின்றி எதையும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தயக்கமின்றி நடித்தேன். அதற்கான பலன் கிடைத்திருப்பதாகவே கருதுகிறேன்,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஒருமுறையாவது ரஜினியுடனும் விஜய்யுடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்பவர், அது ஒரு காட்சியாக இருந்தாலும்கூட பரவாயில்லை என்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
‘தீரா காதல்’ படத்தில் முதன்முறையாக வில்லத்தனம் மிகுந்த கதாபாத்திரத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்ததாம். எனினும் சில ரசிகர்கள் வில்லியாக நடிக்கவேண்டாம் என ஐஸ்வர்யாவிடம் வலியுறுத்தி உள்ளனர்.
“உண்மையைச் சொல்வதானால் எத்தகைய கதாபாத்திரத்திலும் நடிக்க நான் தயார். கதை, கதாபாத்திரம், யார் இயக்குநர் என்பதை மட்டுமே கவனிப்பேன். மூன்றும் சரியாக அமைந்திருப்பதாகத் தோன்றினால் பிறகு எந்தவித தயக்கமும் இருக்காது. இயக்குநர் சொன்னபடி நடிப்பேன்.
“இந்த அடிப்படையில்தான் கவர்ச்சியாக நடிப்பதற்கும் ஒப்புக்கொள்கிறேன். கதைக்கேற்ற கவர்ச்சி என்றால் அதில் தயங்குவதற்கு ஒன்றும் இல்லை. ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பே அதை நன்கு உள்வாங்கிக் கொண்டால் பிறகு பிரச்சினை இருக்காது.
“வில்லத்தனம் செய்வதற்கும் இது பொருந்தும். வில்லி கதாபாத்திரம் என்பதற்காக நான் தயங்கவில்லை. கதாநாயகர்கள் வில்லத்தனம் செய்யவில்லையா, அதுபோல நாயகியும் வில்லி ஆகலாம். அதில் தவறேதும் இல்லை. உண்மையில் வில்லத்தனம் செய்யப் பிடிக்கும்,” என்று சொல்லும் ஐஸ்வர்யாவுக்கு எதிர்காலத் திட்டங்கள் என்று எதுவும் இல்லையாம்.
தாம் வாய்ப்புகளைத் தேடிச்சென்ற காலம் முடிந்து, இப்போது நல்ல வாய்ப்புகள் தம்மைத் தேடிவருவது உற்சாகம் அளிப்ப தாகச் சொல்கிறார்.
‘டிரைவர் ஜமுனா’, ‘சொப்பன சுந்தரி’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஆகிய படங்கள் நடைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்த படைப்புகள். அதனால் ரசிகர்கள் அப்படங்களுடன் தங்களை இணைத்துக்கொள்வது எளிதாக இருந்தது.
“அண்மையில் துபாய் சென்றிருந்தபோது, சில பெண்கள் என்னைச் சந்தித்து ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தைப் பாராட்டிப் பேசினர்.
“பெண்கள் என்றாலே வீட்டு வேலை செய்யப் பிறந்தவர்கள் போல பாவிப்பது, நம்மூரில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த நிலை மாறவேண்டும். பெண்கள் துணிச்சலாகச் செயல்பட வேண்டியது அவசியம்,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

